ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் சிங்கஸ் அணி, 2025-ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனியை தக்கவைக்குமா என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டு இருந்த நிலையில், தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு, சென்னை அணி நிர்வாகத்திற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் குறித்து பழைய விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதில் 5 முறை சாம்பியனாக, சென்னை அணி, முன்னாள் கேப்டன் தோனியை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை அன்கேப்ட் ப்ளேயர் என்ற விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோரிக்கை வைத்திருந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு இந்த விதியை நீக்கியிருந்த பிசிசிஐ தற்போது இந்த விதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் மேட்ச், ஒருநாள், டுவென்டி 20 இன்டர்நேஷனல்) ஓய்வு பெற்று 5 ஆண்டுகளை கடந்த வீரர்கள், பிசிசிஐயுடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லாத இந்திய வீரர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். கடந்த ஜூலைமாதம் நடைபெற்ற ஐபிஎல் அணிகள் உரிமையாளர்கள் கூட்டத்தில், இந்த விதி குறித்து, சிஎஸ்.கே அணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
2024 சீசன் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனியை 12 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது. 2020 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 43 வயதான தோனியை அன்கேப்ட் விதிப்படி மீண்டும் தக்க வைத்துக் கொண்டால், அவருக்கு கணிசமான அளவு குறைவான தொகையே சம்பளமாக வழங்கப்படும், இது 66.67 சதவீதம் குறைவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“