ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களை ரிப்போர்ட் கார்டு எடுத்து வர சொன்ன பிசிசிஐ!

இதில் ஃபெயிலானால், யாராக இருந்தாலும் இந்திய அணிக்கு தேர்வாக முடியாது

ஆசைத் தம்பி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த அணி முதன் முதலாக இந்திய அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்க அதிக ஆர்வம் காட்டியது பிசிசிஐ. மேலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களின் கிரிக்கெட் பாதைக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் பிசிசிஐ இருக்கிறது. இதனால், இந்தியாவுடனே நாங்கள் எங்களது வரலாற்று சிறப்பு வாய்ந்த முதல் டெஸ்ட் போட்டியை விளையாட விரும்புகிறோம் என ஆப்கானிஸ்தான் விருப்பம் தெரிவித்ததால், இந்தியாவுடன் அவர்கள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 14ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் யோ – யோ டெஸ்ட்டில் பங்கேற்று அதன் ரிப்போர்ட்டை ஜூன் 8ம் தேதியன்று சமர்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

யோ – யோ டெஸ்ட் என்றால் என்ன?

இந்த டெஸ்ட் மூலம் ஒரு வீரரால் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு நேரம் ஓட முடிகிறது என்பது கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள இரு கோடுகளை, தொடர்ச்சியாக இரு இடைவெளிக்குள் ஓடி கடக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திற்கும் அல்லது குறிப்பிட்ட சில நொடிகளுக்கு ஒருமுறை பீப் என சத்தம் கொடுக்கப்படும். சத்தம் கேட்டவுடன் ஒடிக்கொண்டிருக்கும் வீரர் இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். வேகம் குறைபட்டால் மீண்டும் அதே கோட்டில் துவங்கி அந்த வேகத்தை, அடுத்த பீப் சத்தம் வருவதற்குள் அடைய வேண்டும்.

இவ்வாறு வைக்கப்படும் யோ-யோ டெஸ்ட் அமைப்பு முழுவதும் மென்பொருள் கட்டமைப்பில் உள்ள ஒரு கணிப்பொறியில் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். 20 மீட்டர் இடைவெளியில் இந்த டெஸ்ட் நடப்பதால், ஒரு வீரர் 20 மதிப்பெண் எடுத்தால் அவர் சிறப்பான உடற்தகுதியுடன் இருப்பதாக அர்த்தம்.

முன்னதாக நடந்த இந்த தேர்வில் யுவராஜ் 16 மதிப்பெண்ணும் ரெய்னா 16.5 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்தனர். இந்த தேர்வில் தோல்வி அடைந்ததால் தான் யுவராஜ் சிங்கால் தற்போது வரை அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. ரெய்னாவும் தனது உடலை சற்று பெருக்க விட்ட சமயத்தில், அவரும் அணியில் இருந்த தொடர்ந்து நீக்கப்பட, கடுமையான பயிற்சிக்கு பிறகு, இந்த டெஸ்ட்டில் வெற்றிப் பெற்று, அதன் பிறகே இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானார். அதற்குள் அவருக்கு நாக்கு தள்ளிவிட்டது எனலாம்.

ஃபிட்டாக இருக்கும் கேப்டன் விராட் கோலி இந்த யோ-யோ டெஸ்ட்டில் சாதாரணமாக 21 மதிப்பெண்கள் எடுக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் ஃபிட்டாக அல்ல… மிகவும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் விராட் கோலி தீவிரமாக உள்ளார். அது எப்பேற்பட்ட சாதனைகள் படைத்த வீரராக இருந்தாலும், ஃபிட்னஸ் இல்லாவிட்டால் அணியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது கோலியின் நிலைப்பாடு.

இவருக்கு பயந்தே, ரவிச்சந்திரன் அஷ்வின் உட்பட சில ஸ்லோ ரன்னிங் வீரர்கள், கேப்டனிடம் தங்களை நிரூபித்தால் தான் அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதை அறிந்து, கடுமையான பயிற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்திய தேசிய அணி வீரர்கள் மட்டுமின்றி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடன் பயிற்சி டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகியுள்ள இந்திய ஏ அணி வீரர்களும் இந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்று தங்கள் உடல்திறனை நிரூபிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், படிக்கும் மாணவர்களுக்கு ரிப்போர்ட் கார்டு போன்றது கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த யோ-யோ டெஸ்ட் ரிப்போர்ட். இதில் ஃபெயிலானால், யாராக இருந்தாலும் அணிக்கு தேர்வாக முடியாது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close