RTI சட்டத்தின் கீழ் பிசிசிஐ : இந்திய கிரிக்கெட் வாரியம்... அதாவது பிசிசிஐ, தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
கீதா ராணி என்பவர் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையிடம் ஆர்.டி.ஐ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குறித்தும் அதற்குக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், திருப்திகரமான பதில் வரவில்லை என்று மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இது தொடர்பான விசாரணையில், பிசிசிஐ -யை ஆர்.டி.ஐ வரம்புக்குள் கொண்டுவர முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய தகவல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 2(h) கீழ் 'Public Authority' என்று பிசிசிஐ அறிவிக்கப்பட்டு தற்போது அந்த வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பிசிசிஐ இனி Public கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர், "பொதுமக்களின் கேள்விகளை முறையாகப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அடுத்த 15 நாட்களில் எடுக்க பிசிசிஐ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரிகளையும் நியமிக்கும்படி பிசிசிஐ-யிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.மேலும் மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை முறைப்படுத்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கணக்குகள் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளோம்"என்றார்.
தன்னிச்சையான அமைப்பு என்று எண்ணற்ற உரிமைகளை கையில் வைத்திருந்த பிசிசிஐ, இனி எந்தவித ஒளிவுமறைவும் இன்றி பதிலளிக்க வேண்டும். சிம்பிளா சொல்லனும்-னா... மேட்சும் ஜெயிக்கணும்... தோற்றால் கேட்கும் காரணத்திற்கு பதிலும் சொல்லணும்!.