இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தனது வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் இதுவரையிலான கேப்டன்களில் மிகச் சிறந்த கேப்டன் என்று ஒரு கேள்வி எழுந்தால் பலரும் நிச்சயமாக மகேந்திரசிங் தோனி என்றுதான் சொல்வார்கள். அதே போல, இந்திய அணியின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்றால் நிச்சயமாக அதற்கும் தோனியின் பெயர்தான் பதிலாக இருக்கும். மிகச் சிறந்த மேட்ச் வின்னிங் ஃபினிஷர் யார் என்றால் அதுவும் தோனிதான். அதனால், தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட சர்வதேச லட்சிய அணிக்கு மகேந்திரசிங் தோனியை கேப்டன் என்று அறிவித்தது.
கபில்தேவ்க்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனிதான். சர்வதேச ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என இரண்டு வகையான போட்டி உலகக்கோப்பைகளையும் திறமையான கேப்டனாக செயல்பட்டு வென்றுகொடுத்த தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர், தி லெஜண்ட் என்றால் அது மிகையல்ல.
அத்தகை திறமை மிக்க புகழ்மிகு தல தோனி தற்போது போட்டிகளில் முன்பைப் போல ஜொலிக்காமல் தடுமாறி வருகிறார். 38 வயதாகும் தோனி படிப்படியாக டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும், அவர் இன்னும் தனது கிரிக்கெட்டிலிருந்து தனது நிரந்தர ஓய்வை அறிவிக்கவில்லை.
சமீப காலமாக தோனி இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார். கடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறுவதற்கு தோனியின் மந்தமான ஆட்டம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், ஒரு அணியின் தோல்விக்கு ஒரு வீரரை மட்டுமே எப்படி குற்றம் சாட்ட முடியும்?
இதனைத் தொடர்ந்து, தோனி அணியில் இருந்து குறுகிய கால ஓய்வில் சென்றார். ஆனால், அதன் பிறகு அவரை பிசிசிஐ இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை.
இந்திய அணியில் தோனியின் இடம் அப்படியே வெற்றிடமாகத்தான் உள்ளது. இந்திய அணியின் எதிர்கால நலன் கருதி அவருடைய இடத்தை நிரப்புவதற்காக இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு வாய்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், தோனி விரைவில் தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தோனி தனது மௌனத்தைக் கலைக்காமல் அமைதியாகவே உள்ளார்.
இந்த நிலையில், 2019-20 சீசனுக்கான இந்திய வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், தல தோனியின் கிரிக்கெட் சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.
இந்த பட்டியல், 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரை உள்ளடக்கியது. இதில், இளம் வீரர்களான தீபக் சஹார், மாயங்க் அகர்வால், ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இந்த பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில், உயர்தர A+ பிரிவில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரோ ஆகிய மூன்று வீரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அதே போல, முதல் தர வீரர்கள் என்கிற A பிரிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பிசிசிஐயின் வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லாதது தோனியின் ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக இருந்து மிகவும் திறமையாக வழிநடத்தி உலகக் கோப்பையை வென்று தந்த ஒரு ஜாம்பாவனை ஓய்வு பெறும் நேரத்தில் பிசிசிஐ இப்படி அவமதிக்கும் விதமாக வழியனுப்பி வைப்பதா என்று ரசிகர்கள் பிசிசிஐ நோக்கி சமூக ஊடகங்களில் கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.