T20 World Cup 2024 | India Vs Pakistan | BCCI | ICC: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அரங்கேறும் 19-வது லீக் ஆட்டத்தில் ஏ-பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தப் போட்டியை ஒட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பயிற்சி பிட்ச் நிலைமைகள் குறித்து ஐ.சி.சி-யிடம் அதிகாரப்பூர்வமற்ற புகாரை பி.சி.சி.ஐ கொடுத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பூங்காவில் நடந்த பயிற்சியின் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இது இந்திய அணியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் கை வலியால் ரோகித் பாதிக்கப்பட்டார்.
த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் நுவான் வீசிய பந்து அவரது கட்டை விரலில் காயத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா உடற்தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் நியூயார்க்கில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடிய ஆடுகளத்தில் இருக்கும் பவுன்ஸ் பல வீரர்களை தொந்தரவு செய்துள்ளது. நட்சத்திர வீரரான விராட் கோலி காயத்தைத் தவிர்த்தாலும், அவரது பேட்டிங் பயிற்சியின் போது பவுன்ஸுக்கு எதிராக போராடினார்.
இந்த வார தொடக்கத்தில் கூட, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே குறைந்த ஸ்கோர்கள் கொண்ட ஆட்டத்தின் போது, ஐ.சி.சி நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டிராப்-இன் பிட்ச் மற்றும் மோசமான அவுட்ஃபீல்ட் நிலைமைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தது. கூடுதலாக, அயர்லாந்தின் பயிற்சியாளர் ஹென்ரிச் மலான், இந்தியா - அயர்லாந்து போட்டியின் போது ஆடுகளம் குறித்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“