BCCI national selection committee Tamil News: இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, பிப்ரவரியில் ஸ்டிங் ஆபரேஷன் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், 5 பேர் கொண்ட குழுவில் ஒரு இடம் கடந்த பிப்ரவரியில் இருந்து காலியாக உள்ளது. கமிட்டியின் தற்போதைய உறுப்பினர்கள் சுப்ரோதோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத் மற்றும் ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர், முன்னாள் தலைவர் சேத்தன் ஷர்மா ராஜினாமா செய்த பின்னர் இடைக்காலத் தலைவராக செயல்படுகின்றனர்.
இந்த நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தீவிரப்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு தேர்வுக் குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சீனியர் ஆண்கள் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும், தலைவர் பதவிக்காக தகுதியையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, அவர் குறைந்தபட்சம் 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் சர்வதேச போட்டி கள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.
குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு கிரிக்கெட் கமிட்டியிலும் மொத்தம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் ஆண்கள் அணி தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருக்க தகுதி பெற மாட்டார்கள் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டியலிடப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
ஜீ நியூஸின் ஸ்டிங் ஆபரேஷனில், இந்திய வீரர்கள் உடற்தகுதியுடன் இருக்க ஊசி போடுவதாக சேத்தன் சர்மா கூறியதாகக் கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா தனது வீட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.
நவம்பரில் டி20 உலகக் கோப்பை தோல்வியைத் தொடர்ந்து பிசிசிஐ முழு தேர்வுக் குழுவையும் மாற்றியயது. ஆனாலும், சேத்தன் சர்மா ஜனவரியில் மீண்டும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil