Rahul Dravid | Jay Shah | Indian Cricket Team | BCCI: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: BCCI look for new coach: Rahul Dravid can re-apply, says Jay Shah
இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? என்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்றும், தற்போதைய பயிற்சியாளர் டிராவிட் விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜெய் ஷா, “ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் உலகக் கோப்பை வரை உள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற விரைவில் அழைப்பு விடுக்க உள்ளோம். டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால், அவர் விண்ணப்பிக்கலாம். அதற்கான தகுதி அளவுகோல்களை நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து துணை ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை பெற அழைப்பு விடுப்போம். பயிற்சியாளரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் இருக்கும், ”என்று கூறினார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி இரண்டு குழுக்களாக பயணிக்கும் என்றும், ஐ.பி.எல்-லில் பிளே-ஆஃப்க்கு தகுதி பெறாத அணியில் இடம் பிடித்துள்ள இந்திய வீரர்கள் மே 24 அன்று முதல் குழுவுடன் பயணிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "அணி இரண்டு குழுக்களாக பயணிக்கும், முதல் குழு இந்த மாதம் 24 ஆம் தேதி பயணிக்கும், மீதமுள்ளவர்கள் ஐ.பி.எல் முடிந்த பிறகு செல்வார்கள்" என்று அவர் கூறினார்.
இம்பாக்ட் பிளேயர் விதி விவாதிக்கப்படும்
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் நடக்கும் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து உரிமையாளர்ககளுடனும் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியைப் பற்றி விவாதிக்க உள்ளது. இந்த விதி நடப்பு ஐ.பி.எல் சீசனில் பெரும் விவாதத்தை தூண்டியிருக்கிறது. குறிப்பாக ஆல்-ரவுண்டர்களின் பங்கை அணியில் குறைத்துள்ளது. சிவம் துபே போன்ற வீரர்கள் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிக்காக பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. அவரை வெறுமனே பேட்டிங்கிற்காக மட்டும் சி.எஸ்.கே அணி பயன்படுத்தி வருகிறது.
இந்த ஐ.பி.எல் சீசனில் அந்த விதி ‘சோதனையாக’ பயன்படுத்தப்பட்டது. அது நிரந்தர விதி அல்ல. அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசித்த பிறகு அடுத்த சீசனுக்கான முடிவை எடுக்க பி.சி.சி.ஐ தயாராக உள்ளது. “இந்த ஐ.பி.எல்.லில் இம்பாக்ட் பிளேயர் ஒரு சோதனையாக பயன்படுத்தப்பட்டது. இது இரண்டு இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக செய்யப்பட்டது. இது நிரந்தரம் இல்லை, இந்திய அணியின் கேப்டன், வீரர்கள், உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, பின்னர் அது பற்றிய முடிவு எடுப்போம். உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்த சந்திப்பு நடக்கலாம்." என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.
அடுத்து ஐ.பி.எல் உரிமையாளர்களை சந்திக்கும் போது, வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வது குறித்தும் இந்திய வாரியம் விவாதிக்க உள்ளது.
இதற்கிடையில், இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட், என்.சி.ஏ-வின் தலைவர் வி.வி.எஸ் லட்சுமண், தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாடுகளின் பொது மேலாளர் அபே குருவில்லா ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக பல ஆட்டங்கள் எந்த முடிவும் இல்லாமல் முடிவடைவகிறது. இதனால், குளிர்காலத்தில் ஆடப்படும் ரஞ்சி டிராபி போட்டிகளின் நேரத்தை மறுபரிசீலனை செய்ய வாரியம் பரிசீலித்து வருகிறது. "உள்நாட்டு கிரிக்கெட்டுக்கான பரிந்துரைகளை நாங்கள் பெற்றுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். வடக்கு மண்டலத்தின் சில பகுதிகளின் வானிலை கருத்தில் கொள்ளப்பட வேண்டும், ” என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“