Sourav Ganguly Tamil News: 2022ம் ஆண்டு ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) தொடரில் இன்னும் 2 அணிகளை பி.சி.சி.ஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ) அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இந்த 2 அணிகளுக்கான ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஒரு அணியும், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவை மையமாகக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ உருவாக்கியது.
இதில், லக்னோ அணியை ரூபாய் 7090 கோடிக்கு ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். அகமதாபாத் அணியை ரூபாய் 5,600 கோடிக்கு சி.வி.சி கேபிடல்ஸ் குழுமம் வாங்கியது. இதன்மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிசிசிஐ வருமானம் ஈட்டியுள்ளது.
இந்நிலையில், லக்னோ அணியை வாங்கிய ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்காவின் கால்பந்து அணியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இது தற்போது கிரிக்கெட் வட்டராத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடருக்கான கால்பந்து கிளப்பான ATK மோகன் பாகனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, கங்குலி அதன் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும், சஞ்சீவ் கோயங்கா தலைவராகவும் உள்ளார் என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்த அணி கொல்கத்தா கேம்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தொழிலதிபர்களான ஹர்ஷவர்தன் நியோடியா, சஞ்சீவ் கோயங்கா மற்றும் உத்சவ் பரேக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள் என்றும் அந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த பிசிசிஐ உறுப்பினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், இது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு தெளிவான மோதலை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தினார். “கங்குலி பி.சி.சி.ஐ-யின் தலைவர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இது போன்று சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல” என்று அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவையும், பிசிசிஐ தலைவர் கங்குலியையும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக தொடர்பு கொண்ட நிலையில், அவர்கள் தரப்பில் இருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
எனினும், கடந்த செவ்வாயன்று CNBC TV18 செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கங்குலியுடனான அவரது தொடர்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சாத்தியமான மோதலை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சீவ் கோயங்கா, "அவர் (கங்குலி) மோகன் பாகனில் இருந்து முற்றிலும் விலகப் போகிறார்" என்றார். அது எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு, "நான் இன்று என நினைக்கிறேன்." என்று கூறினார்: “அந்த அறிவிப்பை அவர் தான் வெளியிட வேண்டும். அதை நான் முன்கூட்டியே தெரிவித்ததற்கு என்னை மன்னிக்கவும்" என்றும் தெரிவித்தார்.
ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரை, கங்குலியிடம் இருந்து ஏடிகே மோகன் பாகன் கிளப் உடனான எதிர்காலம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. கங்குலி கால்பந்து கிளப்பில் இருந்து விலகினாலும் ஐபிஎல் ஏலதாரர்களில் ஒருவருடன் பிசிசிஐ தலைவராக உரிமையாளர் ஏல செயல்முறையில் அவர் ஈடுபடுவது குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம்.
கங்குலி 2019ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராக இருந்து வருகிறார், மேலும் வாரியம் எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகளிலும் அவர் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி மறுவடிவமைக்கப்பட்ட பிசிசிஐ அரசியலமைப்பில், நீதிபதி ஆர்.எம். லோதா கமிட்டி பல சாத்தியமான சட்டங்களை பட்டியலிட்டுள்ளது.
“பிசிசிஐ, ஒரு உறுப்பினர், ஐபிஎல் அல்லது ஒரு உரிமையாளர், சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது அவரது உறவினர், பங்குதாரர் அல்லது நெருங்கிய கூட்டாளிக்கு விருப்பமுள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்த ஒப்பந்தத்தில் ஈடுபடும் போது இது ஒரு தனிநபரின் பங்கேற்பு, செயல்திறன் மற்றும் பாத்திரங்களை ஆற்றுவதில் சமரசம் செய்யக்கூடிய பதவிகளில் குடும்ப உறுப்பினர்கள், கூட்டாளர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகள் இருக்கும் நிகழ்வுகளை உள்ளடக்குவதாகும்," என்று அந்த சட்டம் குறிப்பிடுகிறது.
கங்குலி இது போன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ஜேஎஸ்டபிள்யூ (JSW) சிமென்ட் (ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ்) டி-சர்ட் அணிந்து, நிறுவனத்தின் பிராண்ட் தூதராக "வேலையில் இருப்பதாக" கூறி இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார். ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ், வணிக நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பிரிவானது, ஐபிஎல்லின் டெல்லி கேபிடல்ஸின் கூட்டு உரிமையாளராக உள்ளது.
அந்த நேரத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியின் வழிகாட்டியாகவும் இருந்த கங்குலி, JSW சிமென்ட் நிறுவனத்தில் தான் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்கும் பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பதற்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (எம்பிசிஏ) முன்னாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தாவால் முறையான புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் விசாரிக்கப்படவில்லை. தற்செயலாக, நீதிபதி டி கே ஜெயின் பதவிக்காலம் ஜூன் 2021 இல் முடிவடைந்த பிறகு, பிசிசிஐ புதிய அரசதிகாரி (ஒம்புட்ஸ்மேன்) மற்றும் நெறிமுறை அதிகாரியை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.