டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டமா? தரகர்களுடனான தொடர்பு குறித்து வீரர்களிடம் பிசிசிஐ விசாரணை

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) ஊழல்கள் நடந்திருப்பதாக கண்டறிந்த பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவின் மூலம் (ஏ.சி.யு) ஒரு இந்திய வீரர், வழக்கமாக ஐபிஎல்லில் ஆடும் வீரர் ஒருவர் மற்றும் ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் உள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். புக்கிகள் மற்றும் மேட்ச் ஃபிக்ஸர்கள் அணி உரிமையாளருடனான ஒரு…

By: Published: September 16, 2019, 9:05:20 AM

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) ஊழல்கள் நடந்திருப்பதாக கண்டறிந்த பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவின் மூலம் (ஏ.சி.யு) ஒரு இந்திய வீரர், வழக்கமாக ஐபிஎல்லில் ஆடும் வீரர் ஒருவர் மற்றும் ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் உள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புக்கிகள் மற்றும் மேட்ச் ஃபிக்ஸர்கள் அணி உரிமையாளருடனான ஒரு சட்டவிரோத ஒப்பந்தத்தின் மூலம் அணியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டபின், “ஆட்டத்தில் வெற்றிப் பெறும் வகையில் அணியை நடத்துகிறார்கள்” என்று இந்த விசாரணையில் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், “புக்கிகளுடன் தொடர்பில் உள்ள முக்கியமான நபர்கள் வெவ்வேறு அணிகளில் பரவி இருக்கிறார்கள்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன்.

சம்பந்தப்பட்டவர்களிடையே பணத் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகளுக்கு இந்த தகவல் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏசியூ சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் மாநில போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பி.சி.சி.ஐ.யின் ஏசியூ தலைவர் அஜித் சிங், “வீரர்களை அணுகிய சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன” என்றார்.

“இதுகுறித்து சம்பந்தப்பட்ட வீரர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர், அவர்களை அணுகியவர்கள் யார் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். எந்த சூழ்நிலையில், அவர்கள் எப்போது அணுகப்பட்டார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். நாங்கள் இதுவரை எந்த அணி உரிமையாளர்களையும் கேள்வி கேட்கவில்லை,” என்று முன்னாள் ராஜஸ்தான் டிஜிபி மற்றும் பி.சி.சி.ஐ.யின் ஏசியூ தலைவர் அஜித் சிங் கூறினார்.

அதிகாரப்பூர்வமற்ற டி20 லீக்குகளில் பரவலான ஊழல் சம்பவங்கள் பல நடந்துள்ளன. ஆனால் பி.சி.சி.ஐ-அங்கீகாரம் பெற்ற ஒரு உயர் நிலை தொடர் இதுபோன்ற பிரச்சனையின் கீழ் வருவது இதுவே முதல் முறை.

எட்டு அணிகள் கொண்ட டி.என்.பி.எல் தொடரில், இந்தியாவின் சிறந்த வீரர்களான ஆர் அஸ்வின், முரளி விஜய், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த லீக்கை, ஸ்டார் இந்தியாவை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு செய்து வருகிறது. இதில் முக்கிய கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹேடன், பிரட் லீ, ஸ்காட் ஸ்டைரிஸ், சைமன் டவுல், மைக்கேல் கிளார்க் மற்றும் டேவிட் ஹஸ்ஸி போன்ற விளையாட்டு வீரர்கள் வர்ணனை செய்து வருகின்றனர்.

ராஜ்புதானா கிரிக்கெட் லீக்குடன் தொடர்புடைய குஜராத் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த புக்கிகள் ஜெய்ப்பூர் காவல்துறையினரால் 2017 ஆம் ஆண்டில் ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் – டிஎன்பிஎல் அணி உரிமையாளர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததை கடந்த ஏப்ரல் மாதம், கண்டறிந்தோம் ஏசியூ விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தொடர்ச்சியான கூட்டங்களுக்குப் பிறகு, அந்த அணியின் உரிமையாளருக்கு ரூ .4 கோடி வழங்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ராஜ்புத்னா லீக்கிலிருந்து வந்ததாகக் கூறப்படும் அந்த நபர், அணியின் உள் தகவல்களை தெரிவிப்பதால், பந்தயம் கட்டுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும், ஆட்டத்தின் போக்கையே மாற்றலாம் என்றும் மற்றவர்களுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

டிஎன்பிஎல் பயிற்சியாளர் ஒருவருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு புக்கி வைர நகை செட் வழங்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த பயிற்சியாளர் ரூ .25 லட்சம் தொகையை பெறுவதற்கு முன்பு ஒரு எஸ்யூவி கார் கேட்டதாகவும் நம்பப்படுகிறது.

அந்த பயிற்சியாளர் வீரர்களுக்கு எத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களைக் கொடுத்திருப்பதாக புக்கிகளில் ஒருவர் தங்களுக்குத் தெரிவித்ததாக ஏசியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியாளர் இப்போது ஒரு புதிய அணிக்கு மாறி வருவதால், சூதாட்டம் மேலும் பரவக்கூடும் என்று ஏசியூ அஞ்சுகிறது.

ஏசியூ-வால் “சந்தேகத்திற்குரியவர்” என்று பெயரிடப்பட்ட மற்றொரு வீரர் பல ஆண்டுகளாக ஐபிஎல் அணிகளில் ஆடி வருகிறார். மேலும் முதல் தர கிரிக்கெட் வீரராகவும் அறியப்படுகிறார். 2019 டிஎன்பிஎல் சீசன் துவங்குவதற்கு முன்பு, அந்த வீரர் மற்றவர்களை சூதாட்டத்தில் ஈடுபட அணுகியதாக கூறப்படுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த தரகரால் அந்த வீரர் இயக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bcci probes links between players bookie in tamil nadu premier league

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X