இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெறுவதோடு
2 கி/மீ ஓடும் புதிய டெஸ்ட்டிலும் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
"சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களின் உடற்தகுதி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இது போன்ற புதிய சோதனை பயிற்சியில் வீரர்கள் ஈடுபடும் போது தான் அவர்களால் அடுத்த நிலைக்குச் செல்ல இயலும். மற்றும் இந்த உடற்பயிற்சி உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட உந்துதலாக இருக்கும்" என்று பிசிசிஐ- யின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
2 கி/மீ தூரத்தை 8 நிமிடம் 15 வினாடிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் கடக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம் 30 வினாடிகளில் கடக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் புதிய விதியில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
"யோ யோ டெஸ்டடை விட இந்த டெஸ்ட் வீரர்களுக்கு நல்ல பயனைத் தரும். கிரிக்கெட் விளையாடும்போது வேகமாக ஓடுவதற்கு இது உதவும். மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் வீரர்களால் ஏமாற்ற முடியாது" என்று முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ராம்ஜி சீனிவாசன் கூறுகின்றார்.
பிசிசிஐ கடந்த சில வருடங்களாக யோ யோ டெஸ்ட்டை நடத்தி வருகின்றது. இதில் தேர்ச்சி பெரும் வீரர்களை மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதித்து வருகின்றது. அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் போன்றோர் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil