வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 12-ந்தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் களமாடும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
Advertisment
விமர்சனம்
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, டி20 அணிக்கான கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தொடருகிறார். மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மீண்டும் ஒரு முறை தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம், அவர்களை குறுகிய வடிவிலான போட்டிகளில் இருந்து ஓரங்கட்டுவது போல் தெரிகிறது. இதேபோல் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெறவில்லை.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியில் இஷான் கிஷன், சுப்மன் கில், சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்களை தேர்வு செய்யவில்லை.
Advertisment
Advertisements
இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்று உள்ள நிலையில், அவர் அணியில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அவரது தலைமையிலான குழு தேர்வு செய்துள்ள அணி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சர்ச்சை
இதற்கிடையில், புதிய தேர்வுக்குழு தலைவராக முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளார் அஜித் அகர்கர். இந்திய டி20 அணிக்கான வீரர்கள் யார் என்ற அறிவிப்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பெயரில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியை தேர்வு செய்தது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவா? அல்லது ஜெய் ஷாவா? என்ற ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தாலும், தனித்தனியாக அறிவித்திருக்கலாமே என்ற ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதனால் முதல் நாளிலேயே அஜித் அகர்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிடாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மட்டுமே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஜெய் ஷா பெயரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் விமர்சனத்துக்கு வலு சேர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil