BCCI Secretary Jay Shah: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய ஐ.சி.சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான 'தேர்தல்' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு ஐ.சி.சி. அறிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் எனவும், டிசம்பர் 1 முதல் பதவியேற்பார் எனவும் அறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐ.சி.சி.யின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள தினசரி செய்தித்தாளான 'தி ஏஜ்' வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் பிற முழுநேர உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றதாக தெரிவித்துள்ளது.
எனினும், இதுதொடர்பாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா அல்லது ஐ.சி.சி தரப்பில் இருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை 35 வயதான ஜெய் ஷா ஐ.சி.சி தலைவராகும் பட்சத்தில், ஐ.சி.சி வரலாற்றிலே இளம் தலைவர் என்கிற பெருமையை அவர் பெற முடியும்
முன்னதாக, இந்தியாவின் ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங்க் மனோகர் ஆகியோர் கடந்த காலங்களில் ஐ.சி.சி-யின் தலைவராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“