BCCI Tamil News: கொரோனா தொற்றின் 2வது அலைக்கு மத்தியில் துவங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 14 வது சீசனில் சில வீரர்களுக்கும், அணி நிர்வாகத்தினர் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்படவே தொடர் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்தது.
இதனையடுத்து தொடரில் கலந்து கொண்ட வீரர்கள் பாதுகாப்பாக சொந்த மண் திருப்பினர். இருப்பினும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் செல்ல மட்டும் தாமதம் ஏற்பட்டது. மேலும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வீரர்கள் சொந்த மண் திரும்புகையில், மீண்டும் போட்டிகள் நடத்தப்பட்டால் அவர்கள் கலந்து கொள்ள போவதில்லை என அந்த அணியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஒத்தி வைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், ஆர்வலர்கள் மனதிலும் நீங்காமல் நீடித்து வந்தது. மீதமுள்ள போட்டிகளை நடத்த தவறினால் பல கோடி நஷ்டம் ஏற்படும் என ஐபிஎல் பங்குதாரர்கள் ஒரு புறம் கேள்வி எழுப்பவே, எஞ்சிய போட்டிகள் நடத்துவது பற்றி திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், இது குறித்த முடிவுகள் இன்று நடத்தப்பட்ட ஸ்பெஷல் ஜெனரல் மீட்டிங்கில் (எஸ்ஜிஎம்) பேசப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், 31 ஆட்டங்கள் மீதம் வைத்து நிறுத்தப்பட்ட இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை மீண்டும் நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த மீதமுள்ள 31 போட்டிகளில் 10 போட்டிகள் ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்பது போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இருப்பினும் போட்டிகள் குறித்த முழு அட்டவணை இன்னும் வெளியிடப்பவில்லை. அதே வேளையில் இன்று நடந்த ஸ்பெஷல் ஜெனரல் மீட்டிங்கில் (எஸ்ஜிஎம்) உலகக் கோப்பை டி -20 தொடர் குறித்த ஆலோசனைகளும் நடந்துள்ளது.
கடந்த ஆண்டே நடத்தி முடிக்கப்பட வேண்டிய உலகக் கோப்பை டி -20 தொடர் இந்தியாவில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் இந்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடரை அமீரகத்தில் நடத்த திட்டமிப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி நிலையில், இந்தியா - இங்கிலாந்து தொடருக்கு பிறகு, செப்டம்பர் மாதத்தில் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படமால் இருந்தது.
இந்த நிலையில், இன்று நடந்த ஸ்பெஷல் ஜெனரல் மீட்டிங்கில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்துவது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய மேலும் எங்களுக்கு கால அவகாசம் தேவை என்றும், இந்தியாவில் நிலவும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் சில நாட்கள் கழித்து இதுகுறித்து முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ஜெய் ஷாவின் அறிக்கையில், " டி20 உலகக் கோப்பை நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.