ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் அனைத்து விளையாட்டு அணிகளும் களமாட பதிவு செய்தன. ஆனால், பதிவு செய்யாத ஒரே விளையாட்டு அணியாக இந்திய கிரிக்கெட் அணி இருந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்புவதில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இருப்பதை மேற்கோள் காட்டி, ஆசிய போட்டிக்கு இந்திய அணியை அனுப்புவது குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை களமிறக்குகிறது. மேலும், ஜூன் 30 க்கு முன் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு வீரர்களின் பட்டியலை அனுப்பும் என்றும், போட்டிகள் டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் என்றும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது.
இந்திய ஆடவர் அணியைப் பொறுத்தவரை, அது இந்திய 'பி' அணியாக இருக்கும். ஏனெனில், முக்கிய அணி சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கலந்து கொண்டிருக்கும். இருப்பினும், பிசிசிஐ தனது மகளிர் அணியையும் அனுப்புமா என்பதில் தெளிவு இல்லை.
பிசிசிஐ இரண்டு தேசிய அணிகளை களமிறக்குவது இது முதல் முறை அல்ல. 1998ல், கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி ஒன்று போட்டியிட்டது. மற்றொரு அணி பாகிஸ்தானை சஹாரா கோப்பையில் எதிர்கொண்டது. மிக சமீபத்தில், 2021ல், ஷிகர் தவான் தலைமையிலான அணி இலங்கையில் நடந்த தொடரில் விளையாடியது. அதே நேரத்தில் விராட் கோலி தலைமையிலான மற்றொரு அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தில் இருந்தது.
2010 மற்றும் 2014ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் இந்தியா அதன் அணியை களமிறக்கவில்லை. ஜகார்த்தாவில் 2018 ஆசிய போட்டிலிருந்து வெளியேறிய பிறகு, தற்போது கிரிக்கெட் நடப்பு பதிப்பில் ஹாங்சோ விளையாட்டுகளுக்கான திட்டத்திற்கு திரும்பியுள்ளது. இந்தப் போட்டிகள் கடந்த ஆண்டு நடைபெறவிருந்தன. ஆனால் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil