BCCI – Ravindra Jadeja Tamil News: 15 -வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக மண்ணில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான இந்திய அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. நாளை இரவு 7:30 மணிக்கு துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தனது முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜடேஜா, தான் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவர், தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்றும், பிசிசிஐ, சக வீரர்கள், பிசியோ மருத்துவர்கள், ரசிகர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துக்கொண்டார். மேலும் அவர், காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து பயிற்சியை தொடங்கி அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ஆல்-ரவுண்டர் வீரர் ஜடேஜாவின் முழங்கால் காயம் அணியின் பலத்தை தொந்தரவு செய்துள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இது குறித்து மகிழ்ச்சியடையவில்லை. “ஜடேஜாவின் காயத்தால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, அவர் சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை, உலகக் கோப்பை வரும் என்று நினைக்கவில்லை. ஜடேஜாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை.” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆல்ரவுண்டராக வலம் வரும் ஜடேஜா இந்த ஆண்டு ஒன்பது டி20 போட்டிகளில், எட்டு இன்னிங்ஸ்களில் 50.25 சராசரியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இந்த ஆண்டு அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் 46* ஆகும். இது தவிர, அவர் 1/15 என்ற சிறந்த எண்ணிக்கையுடன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஐந்து இன்னிங்ஸ்களில் 82.00 சராசரியில் 328 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல் டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக அவர் அடித்த 175* ரன்கள் அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். அவர் இந்த வடிவத்தில் 5/41 என்ற சிறந்த புள்ளிவிவரங்களுடன் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil