India Vs England | Ben Stokes | Dhruv Jurel: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா விசாகப்பட்டினம், ராஜ்கோட்டில் நடந்த அடுத்த இரு டெஸ்டுகளில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், ராஞ்சியில் நேற்றுடன் நிறைவு பெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
கவனம் ஈர்த்த துருவ் ஜுரெல்
இந்நிலையில், இந்தப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரான துருவ் ஜூரல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கார்கிலில் போரிட்ட முன்னாள் ராணுவ வீரரின் மகனான துருவ் ஜூரல், முதல் இன்னிங்சில் தனது அரைசதத்தை விளாசிய போது, சல்யூட் அடித்து தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார். அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
எனினும், குலதீப் யாதாவுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்தியா முதல் இன்னிங்சில் 307 என்கிற நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. இதேபோல், 2வது இன்னிங்சில் 192 ரன்கள் கொண்ட வெற்றி இந்திய அணி துரத்துகையில், 38.2 ஓவர்களில் 120 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து ரன் சேர்க்க தடுமாறியது. அப்படியான இக்கட்டான தருணத்தில் சுப்மன் கில் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் துருவ் ஜுரெல்.
இந்த ஜோடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த நிலையில், வெற்றிக்கான கடைசி 2 ரன்களை எடுத்து சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார் துருவ் ஜுரெல். 2வது இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்த அவர் ஆட்டத்தின் நாயகன் விருதையும் வென்றார்.
துருவ் ஜுரெல் மீது கிரஷ் - பென் ஸ்டோக்ஸ் தகவல்
இந்த நிலையில், இங்கிலாந்து அணியில் உள்ள வீரர் ஒருவருக்கு துருவ் ஜுரெல் மீது கிரஷ் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பென் ஸ்டோக்ஸ், “இரண்டு இன்னிங்ஸிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். அவரது கீப்பிங் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பேன். எங்களது அணியின் விக்கெட் கீப்பர் வீரரான பென் ஃபோக்ஸ்-க்கு துருவ் ஜுரெல் மீது லிட்டில் மேன் கிரஷ் உள்ளது. அவரது திறமையான செயல்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தத் தொடர் எங்களுக்கும் இந்தியாவுக்கும் நிறைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன், மேலும் சில இளம், அனுபவமற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவதையும், இந்த வடிவத்தில் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.