இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து லண்டனில் நடந்த 3-வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை புதன்கிழமை மாலை 3:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை
இந்நிலையில், நாளை புதன்கிழமை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஸ்லெட்ஜிங் தொடர்பாக இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தால், தாங்களும் அதனை செய்வோம் என்றும், அதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டோக்ஸ், “இது ஒரு மிகப்பெரிய தொடர். அதனால், நாங்களும் அதனைச் (ஸ்லெட்ஜிங்) செய்வோம். இங்கிலாந்து வீரர்கள் நன்றாகத் தானே இருக்கிறார்கள்? ஒருவேளை இருக்கலாம். நாங்கள் வேண்டுமென்றே எதையும் தொடங்க மாட்டோம். ஆனால் நாங்கள் அதில் இருந்து பின்வாங்கவும் மாட்டோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
மழை அச்சுறுத்தல்?
4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் மான்செஸ்டரில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வீரர்கள் இன்று வலைப்பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மான்செஸ்டரில் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் போட்டி திட்டமிட்டபடி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.