Bhavani Devi Indian fencer Tamil News: சீனாவின் வுக்ஸியில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64-வது சுற்றில் பவானி தேவி பை பெற்றார். அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தினார். பின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனை ஓசாகி செரியை வீழ்த்தினார்.
Advertisment
இந்நிலையில், இன்று நடந்த காலிறுதி போட்டியில் 15-10 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை வீழ்த்திய பவானி தேவி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதன்மூலம், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வரலாறு படைத்துள்ள பவானி தேவி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை மிசாகி எமுரா பெண்களுக்கான சாப்ரே பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். இந்த நிலையில், அவரை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனையான சி ஏ பவானி தேவி.
அடுத்ததாக நடக்கும் அரையிறுதியில், பவானி, உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவி, டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் 32-வது சுற்றில் வெளியேறினார். இதன்பிறகு, குஜராத்தில் நடந்த 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் வாள்வீச்சு சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் 15-3 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
சென்னையில் வசிக்கும் 29 வயதான பவானிதேவி ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய விளையாட்டிலும் வாகை சூடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil