ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது.
மனைவியின் பிரசவத்தின் காரணமாக கேப்டன் விராட்கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியதை தொடாந்து, இந்திய அணியில் துணைக்கேப்டன் ரஹானே கேப்டன் பதவியேற்றார். மேலும் முதல் போட்டியில் விளையாடிய பிரித்வி ஷா மற்றும் விருத்திமான் சஹா நீக்கப்பட்டு அறிமுக வீரர்களாக சுப்மான் கில், முகமது சிராஜ்,மற்றும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டனர். காயமடைந்த ஷமிக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டார்.
இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுளை பறிகொடுத்தனர். தொடக்க வீரர் பர்னர் டக்அவுட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து களமிறங்கிய லபுசேஸன் மேத்யூ வாட்டுன் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தார்.
இதில் நிதானமாக ஆடி 30 ரன்கள் குவித்த வாட் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய லபுசேஸன் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் 0 ரன்னுக்கு அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியிலும் ஸ்மித் அஸ்வி்ன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ஹெட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில், ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்டது. இறுதிகட்டத்தில் லயன் 17 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 6 பந்துகளை சந்தித்த மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா தொடக்க வீரர் சுப்மான்கில்லுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. விரைவாக ரன்கள் சேர்த்த சுப்மான் கில் 38 பந்துகளில் 28 ரன்களும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தி்ல உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.