Australia vs Pakistan: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி அதன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானை விட 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
போட்டி திடீர் நிறுத்தம் - ஷாக் காரணம்
இந்நிலையில், இந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸ் தொடங்கியது போது ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. நல்ல வேளையாக மதிய உணவு இடைவேளை வந்தது. ஆனால், இடைவேளை முடிந்து போட்டி மீண்டும் தொடங்க கால தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இதனை நேரலையில் பார்த்த ரசிகர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் குழம்பி போயினர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, பெவிலியனில் இருந்த 3வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் திடீரென காணவில்லை. அதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் அம்பயர் எங்கே என்று அனைவரும் தேடிப் பார்த்தனர். அப்போது அடுத்த சில நிமிடங்கள் கழித்து, மிகவும் சோர்வாக வந்த அம்பயர் நாற்காலியில் அமர்ந்து தான் லிஃப்டில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார்.
அவர் இடைவேளைக்குப் பிறகு, ஏதோ ஒரு காரணத்திற்காக மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் லிஃப்டில் பாதியிலேயே மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து “நான் நன்றாக இருக்கிறேன்” என்பது போல் கையை சிக்னல் கொடுத்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
அப்போது பேட்டிங் செய்வதற்காக களத்தில் இருந்த டேவிட் வார்னர் மற்றும் எஞ்சிய 2 அம்பயர்களும் 3வது அம்பயர் லிஃப்டில் மாட்டிக் கொண்டார் என்பதை அறிந்து வாய்விட்டு சிரித்தார்கள். முன்பு நாய், பறவை, பாம்பு, சூரிய வெளிச்சம் போன்ற பல்வேறு காரணங்களால் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், அம்பயரை காணவில்லை என முதல் முறையாக இப்போது தான் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“