Chess Olympiad 2022 Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் படம் அருகே பிரதமர் மோடி ஸ்டிக்கர் ஒட்டிய பா.ஜ.க
இந்தியாவில் முதல் முறையயாக நடக்க இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு எடுத்து நடத்தி வரும் நிலையில், மாநில அரசின் சார்பில் மிகச்சிறப்பான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை சதுரங்க பலகைப் போல வர்ணம் பூசியது, இசை ஜாம்பவானான ஏ.ஆர்.ரகுமான் இப்போட்டிக்காக பிரத்யேகமாக பாடல் இசையமைப்பது, சென்னை முழுவதும் ‘தம்பி’ (செஸ் ஒலிம்பியாடின் இலச்சி உருவப்படம்) சிலையாகவும், பதாகையாகவும் விளம்பரப்படுத்துவது, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது என பல்வேறு வகையில் மக்களின் முன் இப்போட்டியை கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அலுவலங்கள், பேருந்து நிலையங்கள், அரசு பள்ளிகள், அரசுப் பேருந்துகள் என பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான விளம்பரம், போஸ்டர், பேனர்களை அரசின் விளம்பரம் மற்றும் செய்தி தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டும், ஒட்டப்படும் உள்ளது. ஆனால் இந்த விளம்பரம், பேனர் மற்றும் போஸ்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படமோ அல்லது பெயரோ இடம்பெறவில்லை. இதை பாஜகவினர் தொடர்ந்து கண்டித்து வந்தனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ள சென்னை அடையாறு உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அரசு விளம்பர போஸ்டரில் பிரதமர் மோடியின் படம் பொரித்த ஸ்டிக்கரை பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித்தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒட்டி இருக்கிறார். மேலும் சென்னையில் எல்லா இடங்களிலும் ஒலிம்பியாட் போஸ்டர்களிலும் மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் படத்தை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஒட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது பஜவினர் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil