ஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்

அர்பாஸ் கான் ஐபிஎல்-ல் பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஒப்புதல்

கடந்தாண்டு நடைபெற்ற 10வது ஐபிஎல் தொடரில், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

2017ல் நடைபெற்ற 10வது ஐபிஎல் தொடரில், சூதாட்டம் நடந்திருப்பது மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக சூதாட்ட தரகர்கள் 3 பேரை கடந்த 16ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெட்டிங்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்த சூதாட்ட கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் அர்பாஸ் கானை விசாரணைக்கு வரும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். இவர், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பியாவார்.

சம்மனை தொடர்ந்து அர்பாஸ்கான் இன்று காலை தானே போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் ஐ.பி.எல். பெட்டிங் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சீனியர் இன்ஸ்பெக்டரும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான சந்தீப் ஷர்மா தலைமையில் 5 பேர் அவரிடம் சூதாட்ட தரகர் ஜலானுடன் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். எத்தனை முறை சோனு மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டீர்கள், இருவருக்கும் உள்ள பண பரிவர்த்தனை என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் அர்பாஸ்கானிடம் எழுப்பினர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டு 2.70 கோடி ரூபாய் இழந்ததாக அர்பாஸ்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த பணத்தை இதுவரை தரவில்லை என்றும், இதனால் ஜலான் தன்னை மிரட்டி வந்ததாகவும் அர்பாஸ் கான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தாவூத் இப்ராஹிமுடன் ஜலானுக்கு தொடர்பு உள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,

போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.  நாங்கள் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. பிசிசிஐ மற்றும் ஐசிசி-யிடம் ஊழல் தடுப்புப் பிரிவுகள் உள்ளன. போலீசார் வேண்டுமென்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்” என்றார்.

இந்தச் சூழ்நிலையில், நடிகர் சல்மான் கானும் இவ்வழக்கில் விசாரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அர்பாஸ் கான் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஐசிசி சேர்மேன் ஷஷான்க் மனோகர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர்,

“எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நான் கண்டுகொள்வதில்லை” என்றார்.

×Close
×Close