மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டி நடத்த எப்படி தண்ணீர் ஏற்பாடு செய்வீர்கள்? என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, சென்னையில் நடக்கவிருந்த ஏழு ஐபிஎல் போட்டிகளில் ஆறு போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. கடந்த 10ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியின் போது, அரசியல் கட்சிகள், அமைப்புகள், திரைப்பட இயக்குனர்கள் நடத்திய போராட்டத்தால் அண்ணா சாலையே முடங்கியது. போலீசார் விழி பிதுங்கினர். இதனால், மீதமுள்ள போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னை காவல்துறை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டது. இந்த விவரம், ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லாவுக்கு தெரியப்படுத்த, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, சென்னை அணியின் ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டன.
ஆனால், இப்போது புனேவில் போட்டியை நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் புனேவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், "மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புனே மைதானத்தைப் பராமரிக்கப் போதுமான தண்ணீர் இருக்கிறதா?. அதற்குத் தேவையான தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்?’ என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
இதனால், சென்னை அணியின் போட்டிகள் புனேவிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.