பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்தியா

மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் கடந்த 17-ந் தேதி அடிலெய்டில் பகல் இரவு போட்டியாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து. அதிலும் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்ட இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. பாக்ஸிங்டே டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போட்டியில், இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யபட்டது. மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பிய கேப்டன் விராட்கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். மேலும் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக ஜடேஜாவும், முதல்போட்டியில் சொதப்பிய பிரித்வி ஷாவுக்கு பதிலாக சுப்மான்கில் அறிமுக வீரராகவும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் அறிமுக வீரராக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக லபுசேஸன் 48 ரன்களும், ஹெட் 38 ரன்களும், வேட் 30 ரன்களும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய லயன் 17 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தொடக்க வீரர் மயங்க் அகர்வால் டக்அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 17 ரன்களிலும்,  தொடக்க வீரர் சுப்மான் கில் 45 ரன்களுக்கும், விஹாரி 21 ரன்களும், பண்ட் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு கேப்டன் ரஹானே ஆல்ரவுண்டர் ஜடேஜா ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தனர். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து நேற்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த ரஹானே மேற்கொண்டு 8 ரன்கள் சேர்த்த நிலையில், 112 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் 14 ரன்களிலும், உமேஷ்யாதவ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஸ்டார்க், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 131 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 2 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து இன்று தொடங்கிய 4-வது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 67 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணி 200 ரன்களிலும் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கிரீன் 45 ரன்களும், வேட் 40 ரன்களும், லபுசேஸன் 28 ரன்களும், கம்மின்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், சிராஜ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 131 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் – ரஹானே ஜோடி நேர்த்தியா விளையாடி வெற்றியை உறுதி செய்தது. 15.5 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 8 வெற்றி பெற்று கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சுப்மான் கில் 36 பந்துகளில் 35 ரன்களும், கேப்டன் ரஹானே 40 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண் டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இவ்விரு அணிகளுகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7-ந் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Boxing day test india beat australia by 8 wickets in melbourne

Next Story
ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க போவதில்லை: ரோஜர் பெடரர்Roger Federer has decided not to play 2021 Australian Open - ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க போவதில்லை: ரோஜர் பெடரர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express