விராட்கோலி, முகமது ஷமி இல்லாத நிலையில், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் மோசமான ஆட்டம், அடிலெய்டில் நடந்து முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி என இந்திய அணியை பெரும் கவலைகள் வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ள பாக்சிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில என்ன மாற்றம் இருக்கும், வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற பல கேள்வி எழுந்துள்ளது.
ஷமிக்கு மாற்று வீரர் யார்?
முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கின் போது வேகப்பந்துவீச்சாளர் ஷமி கைவிரலில் காயமடைந்தார். பரிசோதனையில் அவரது காயம் பெரிதாக இருந்ததால், அவர் தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்கும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த இடத்திற்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
ஏனெனில்,மெல்போர்னில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்பதால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சைனா மேன் குல்தீப் யாதவும் இந்த போட்டியில் இருக்கிறார். ஆனால் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு மாற்றாக முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனிஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பிடிக்க காத்திருக்கின்றனர். ஆடுகளத்தில் ஓரளவு வேகம் இருப்பதாக நிர்வாகம் உணர்ந்தால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பேட்டிங்கில், பிருத்வி ஷா முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அடுத்தடெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக ஆடும் லெவன் அணியில், பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய U-19 உலகக் கோப்பை அணியின் வீரர் சுப்மான் கில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. 21 வயதான அவர் தனது டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கிறார்.
மேலும் கேப்டன் கோலி அணியில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால் ராகுல் சமீபத்திய காலங்களில் டெஸ்டில் பிரகாசிக்கவில்லை. இருந்தாலும் கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ராகுல் தனது முதல் டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் தொடங்கினார். அந்த அனுபவம் இருப்பதால் அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கெட் கீப்பர் மாற்றப்படுமா?
அடிலெய்டில் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய விருத்திமான் சஹா, முதல் இன்னிங்சில் 9 இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சஹா இந்தியாவின் சிறந்த ’கீப்பர், ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சஹா டெஸ்ட் போட்டிகளில் கடந்த 13 இன்னிங்ஸ் களில் ஒரு அரைசதம் கூட பதிவு செய்யவில்லை.
இதனால் அவருக்கு மாற்றாக ரிஷாப் பந்த் அணியில் சேர்க்கப்படலாம். இதில் பண்ட் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 73 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். மேலும் டெல்லி அணியின் விக்கெட் கீப்பருக்க ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"