‘தென்இந்திய கிரிக்கெட்டின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைந்த புச்சிபாபு நினைவாக அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) வருகிற 15ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11ம் தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால் முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது.
2016-17 சீசன், தமிழ்நாடு பிரீமியர் லீக் வருகையால் இப்போட்டி இடம் பெறத் தவறியது. தற்போது 6 ஆண்டுக்கு பிறகு திரும்பும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இந்தியன் ரெயில்வே, திரிபுரா, ‘பி’ பிரிவில் அரியானா, பரோடா, மத்திய பிரதேசம், ‘சி’ பிரிவில் மும்பை, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், ‘டி’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் கேரளா, பெங்கால் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 4 பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
வருகிற 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- இந்தியன் ரெயில்வே (இடம்: கோவை), அரியானா-பரோடா (நத்தம்), மும்பை-டெல்லி (சேலம்), தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா (நெல்லை) ஆகிய அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டி கோவையில் (செப்.8-11) அரங்கேறுகிறது. 2 கோடி செலவில் நடத்தப்பட உள்ள இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், ஆட்டநாயகனுக்கு ரூ.10 ஆயிரமும், தொடர்நாயகனுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.
தோனியின் கோரிக்கை நிராகரிப்பு
இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி, மாநில அணிகளிடமிருந்து ஏராளமான ஆர்வம் இருப்பதாகவும், ஜார்கண்ட் அணியை சேர்க்க எம்.எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டியிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எம்எஸ் தோனி ஜார்கண்டை சேர்க்க விரும்பினார். ஆனால், அட்டவணை மிகவும் இறுக்கமாக இருந்தது. எங்களிடம் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன. எனவே எங்களால் அவர்களுக்கு இடமளிக்க முடியவில்லை. சத்தீஸ்கர் மற்றும் சர்வீசஸ் அணிகள் கூட பங்கேற்க விரும்பின. அணிகள் இந்த நிகழ்வை முன் சீசனுக்குத் தயாராக பயன்படுத்துவதால், கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்துவதற்கு நாங்கள் தேர்வு செய்துள்ளோம், ஏனெனில் இது வீரர்களுக்கு நல்ல தயாரிப்புகளை வழங்கும்.” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.