அடிக்க முடியாத நிலையில் உள்ள பும்ராவின் பந்துவீச்சு, சுழற்பந்தை லாவகமாக எதிர்கொள்ளும் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்டின் பேட்டிங், அதிரடி காட்டும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட இந்திய அணியை, நியூசிலாந்து அணி வீரர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலககோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ( 9ம் தேதி) நடைபெற உள்ள முதலாவது அரையிறுதி போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. 11ம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில், இந்திய - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையின் இந்திய அணியின் பலம் குறித்து நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் வெட்டோரி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இணையதளத்தில் வெட்டோரி கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில், இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை இலக்காக வைத்தது. அதுபோல, நியூசிலாந்து அணியும் விளையாட வேண்டும். இப்போதைய நிலையில், பும்ராவின் பந்துவீச்சு, அடிக்கமுடியாத நிலையில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பும்ராவின் திறமையை கணித்த வீரர்கள், அவரது பந்துவீச்சில் சேர்க்கமுடியாத ரன்களை, மற்ற பந்துவீச்சாளர்களின் மூலம் ரன்களை சேர்த்துக்கொண்டனர். இதையே, நியூசிலாந்து அணி வீரர்களும் கடைபிடிக்க வேண்டும்.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். போட்டியின் துவக்கத்திலேயே, துல்லியமாக பந்து வீசி, இந்திய அணியின் துவக்க வீரர்களை முதலிலேயே வீழ்த்திவிட வேண்டும். ரோகித், கோலி விக்கெட்களை துவக்கத்திலேயே வீழ்த்தி, அந்த அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். இந்திய அணி, துவக்கத்தில் மெதுவாக விளையாடுவதாக கூறுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் நிலைத்து நின்றுவிட்டால், கட்டுப்படுத்த முடியாத தர்மசங்கடத்தில், நியூசிலாந்து அணி தள்ளப்பட்டு விடும்.
டிரண்ட் போல்ட், இந்திய அணியை பற்றி நன்கு அறிந்தவர். இந்திய அணிக்கு எதிராக பலமுறை விளையாடியுள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள போல்ட் மற்றும் கேன் வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றி தெரியும். அதற்கு ஏற்றாற்போல, நியூசிலாந்து அணி வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று வெட்டோரி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.