ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் பாணியில் உலகம் முழுதும் டி-20 போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் வங்கதேச நாட்டில் பி.பி.எல் (பங்களாதேஷ் பிரீமியர் லீக், 2024-25) தொடர் கடந்த டிசம்பர் 30 ஆம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் வருகிற 7 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
பி.பி.எல் தொடரில் பார்ச்சூன் பாரிசல், சிட்டகாங் கிங்ஸ், ரங்பூர் ரைடர்ஸ், குல்னா டீசர்ஸ், தர்பார் ராஜ்ஷாஹி, டாக்கா கேபிடல்ஸ், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற நிலையில், பார்ச்சூன் பாரிசல், சிட்டகாங் கிங்ஸ், ரங்பூர் ரைடர்ஸ், குல்னா டீசர்ஸ் ஆகிய 4 அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மற்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், பி.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய அணிகளில் ஒன்றான தர்பார் ராஜ்ஷாஹி அணி அதன் வெளிநாட்டு வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் பேருந்து டிரைவர் என யாருக்கும் சம்பளம் வழங்கவில்லை. இதனால், முகமது ஹாரிஸ் (பாகிஸ்தான்), அஃப்தாப் ஆலம் (ஆப்கானிஸ்தான்), மார்க் டெயால் (வெஸ்ட் இண்டீஸ்), ரியான் பர்ல் (ஜிம்பாப்வே), மற்றும் மிகுவல் கம்மின்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் டாக்காவில் உள்ள ஓட்டலில் சிக்கித் தவித்துள்ளனர்.
மேலும், சில வீரர்களுக்கு 25 சதவீதம் தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தங்களது மீதப் பணத்தைப் பெற அந்த வீரர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அணி நிர்வாகத்திற்கு பலமுறை போன் செய்தும் யாரும் அந்த போனுக்கு பதிலக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த அணியின் உள்ளூர் வீரர்கள் சிலர் தங்கள் முழு சம்பளத்தையும் பெறாமல் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேபோல், தனது வரவேண்டிய சம்பளம் வரவில்லை என்பதால் வீரர்களின் கிட்ஸ் பேக்குகளை பேருந்துக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளார் தர்பார் ராஜ்ஷாஹி அணி வீரர்கள் போட்டிக்கு பயணிக்கும் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் முகமது பாபுல்.
இது தொடர்பாக அவர் ஓட்டல் முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வருத்தமும் அவமானமும் தான் மிச்சம். எங்களுக்கு பணம் கொடுத்திருந்தால் அந்த கிட் பேக்கை வீரர்களுக்கு திருப்பிக் கொடுத்திருப்பேன். இது வரைக்கும் யாரும் வாய் திறக்கவில்லை. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் கிட் பேக்குகள் பேருந்தில் உள்ளன, ஆனால் எனது ஊதியத்தில் பெரும்பகுதி இன்னும் கொடுக்கப்படாததால் என்னால் கொடுக்க முடியாது." என்று ஓட்டுநர் முகமது பாபுல் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வீரர்கள் லீக் சுற்று போட்டிகளுக்கு இல்லாத நிலையில், வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் அளவிற்கு இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் தலையிடுவதாகக் கூறியபோது, தர்பார் ராஜ்ஷாஹியின் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சம்பளம் இல்லாமல் வங்கதேசத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், "நான் ரியான் பர்ல் மற்றும் மற்றவர்களுடன் பேசினேன், அவர்கள் இன்னும் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறவில்லை என்று சொன்னார்கள். ராஜ்ஷாஹியின் உரிமையாளருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், அவர் அதைச் செய்ய முயற்சிக்கிறார் என்று அவர் கூறுகிறார். நேற்று, வங்கதேச விளையாட்டு ஆலோசகர் (ஆசிப் மஹ்மூத்) அவரைச் சந்தித்து, விரைவில் நிலுவைத் தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள், வீரர்கள் தங்கள் கட்டணத்தில் 75 சதவீதத்தைப் பெற்றிருக்க வேண்டும், மீதமுள்ளவை மார்ச் 8 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ராஜ்ஷாஹியின் விஷயத்தில் அது இல்லை, இது மிகவும் சங்கடமானது." என்று அவர் கூறினார்.
இதனிடையே, கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள வழங்காத விவகாரத்தில் காவலில் வைக்கப்பட்ட தர்பார் ராஜ்ஷாஹி அணி உரிமையாளர் ஷபிக் ரஹ்மான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்து வெளிநாட்டு வீரர்களுக்கும் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ததாகவும், பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.