உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்திடம் தோற்கும் என்றும், கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது வெல்வார் என்றும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துக் கூற, அது அப்படியே நடந்திருப்பது உச்சக்கட்ட ஆச்சர்யம்.
இவரது கணிப்புகள் மெய்யானதைத் தொடர்ந்து, தோனி ஓய்வு, தமிழகத்தின் அடுத்த முதல்வர், ரஜினியின் அரசியல் வாழ்க்கை, விஜய்யின் அரசியல் என்று இறங்கி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இவையெல்லாம் உண்மையாகப் போகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்நிலையில், இவரது கணிப்புகள் குறித்து பிரபலங்களும் தங்கள் ஆச்சர்யங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், "இதை நம்பவே முடியவில்லை. இதுபோன்ற கணிப்பை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. என்ன ஒரு அறிவியல் இது. அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் என்றும், இந்தியாவுடனான அரையிறுதியில் நியூசிலாந்து தான் வெல்லும் என்றும் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது வெல்வார் என்று மிகச்சரியாக கணித்திருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், "இவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், உலகக் கோப்பை வெற்றியாளர் குறித்தும், தொடர் நாயகன் குறித்தும் அவர் கணித்தது அனைத்தும் மிகச்சரி. இதை நம்பவே முடியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதேபோல் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஜோதிடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றிப் பெறும் என்று தவறாக கணித்திருக்கிறார். இருப்பினும், கேன் வில்லியம்சன் தான் தொடர் நாயகன் விருது வெல்வார் என்று சரியாக கூறினார். உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு எத்தனை வல்லுனர்கள் வில்லியம்சன் இந்த விருதை பெறப் போகிறார் என்று கணித்திருப்பார்கள் என்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து பலரும் பாலாஜி ஹசனின் ஜோதிட கணிப்புகள் குறித்து சமூக தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.