துபாயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச்-09) அரங்கேறும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பேட் விருதை இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் (227 ரன்கள்) இருக்கிறார். இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் சூழலில், இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கும் வீரர்களுக்கு கோல்டன் பேட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா 226 ரன்களுடன் 2-வது இடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 217 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல், அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 195 ரன்களுடன் இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் 6-வது இடத்திலும், 191 ரன்களுடன் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் 8-வது இடத்திலும் உள்ளனர். மேலும், கேன் வில்லியம்சன் (189) மற்றும் சுப்மன் கில் (157) 9-வது மற்றும் 10-வது இடங்களில் உள்ளனர்.
இருப்பினும், இந்தப் பட்டியலைப் பொறுத்தவரையில், ரச்சின், கோலி, ஷ்ரேயஸ் ஆகிய மூன்று வீரர்களில் ஒருவர் கோல்டன் பேட் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்த தொடரில் சிறப்பாக ஆடி வரும் கோலி ரச்சின் ரவீந்திராவை விட 9 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளார். இதேபோல், தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் ரச்சினை விட 31 ரன்களும் குறைவாக இருக்கிறார். இதனால், கோல்டன் பேட் விருதை வெல்வதில் இந்த மூன்று வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை மூன்று இந்திய வீரர்கள் கோல்டன் பேட் விருதை வென்றுள்ளனர். 2000-ல் சவுரவ் கங்குலி, 2002-ல் வீரேந்தர் சேவாக், 2013 மற்றும் 2017-ல் ஷிகர் தவான் ஆகியோர் வென்றுள்ளனர். இந்த தொடரில் கோலி, ஷ்ரேயாஸ் உட்பட யார் வென்றாலும் அது அவர்களின் முதல் சாம்பியன்ஸ் டிராபி கோல்டன் பேட் விருதாக இருக்கும்.
கோலி ஏற்கனவே இந்திய மண்ணில் நடந்த 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் கோல்டன் பேட் விருதை வென்றார் அசத்தி இருக்கிறார். அவர் இந்த முறையும் கோல்டன் பேட் விருதை வென்றால், ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அந்த விருதை வென்ற முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்து அசத்துவார்.