9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டி துபாயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச்-09) அரங்கேறுகிறது. இந்தப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில், காயம் காரணமாக தவித்து வரும் நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Champions Trophy Final: Matt Henry doubtful for India match
மேட் ஹென்றிக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது தோள்பட்டையில் பீல்டிங் செய்கையில் காயம் ஏற்பட்டது. காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் குணமடையாத பட்சத்தில் அது நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக அமையும்.
ஏனெனில், நடப்பு தொடரில் மேட் ஹென்றி நியூசிலாந்து அணியின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். அவர் இத்தொடரில் ஆடிய 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதிப்போட்டியிலும் இந்திய அணியுடன் மோத உள்ளதால் நியூசிலாந்துக்கு இது பெரும் அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை, நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசுகையில், இறுதிப் போட்டிக்கு மூன்று நாள் ஓய்வு இருப்பதால், மேட் ஹென்றி இறுதிப் போட்டியில் ஆடுவார் என நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், இன்று வெள்ளிக்கிழமை துபாயில் ஊடகங்களிடம் பேசிய நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட், மேட் ஹென்றியின் நிலை குறித்து தெரியவில்லை என்று கூறினார்.
"எங்கள் பார்வையில் இருந்து நேர்மறையான விஷயம் என்னவென்றால், அவர் மீண்டும் பந்து வீசத் தொடங்கினார். நாங்கள் அவருக்கு சில ஸ்கேன்கள் மற்றும் விஷயங்கள் செய்தோம். மேலும் இந்த போட்டியில் விளையாட அவருக்கு ஒவ்வொரு வாய்ப்பையும் வழங்கப் போகிறோம். இந்த கட்டத்தில் அது இன்னும் கொஞ்சம் தெரியவில்லை," என்று பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறினார்.
2019 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு சமீபத்திய காலங்களில், மேட் ஹென்றி தனது வேகம் மற்றும் இயக்கத்தால் இந்தியாவின் டாப்-ஆர்டருக்கு அனைத்து வகையான சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளார். லீக் ஆட்டத்தில் கூட, அவர் இந்தியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னிங்ஸின் தொடக்கத்தில் தனது சீம் பந்துகளால் அவர்களை தொந்தரவு செய்தார்.
மேட் ஹென்றி களமிறங்கவில்லை என்றால், அவருக்குப் ஜேக்கப் டஃபி களமிறங்க வாய்ப்புள்ளது. நேற்று வியாழக்கிழமை லாகூரில் இருந்து வந்த நியூசிலாந்து இன்று வெள்ளிக்கிழமை பயிற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.