வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இலங்கை கேப்டன் சந்திமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது.
இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், செயின்ட் லூசியாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாளில் இலங்கை அணியின் கேப்டன் சந்திமல், பந்தைச் சேதப்படுத்தியதாக நடுவர்கள் அலீம் தார், இயான் ஆகியோர் குற்றச்சாட்டு கூறினார்கள். இதை சந்திமாலும், இலங்கை அணி நிர்வாகமும் மறுத்தன. இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள்.
BREAKING: Chandimal to miss tomorrow’s Test after appeal rejected
READ ⬇https://t.co/y0kZbEo187 pic.twitter.com/DcesHfLGQn
— ICC (@ICC) 22 June 2018
இந்நிலையில், இது தொடர்பான விசாரணை ஐசிசி போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் முன்னிலையில் நடந்தது. விசாரணையில், வீடியோ ஆதாரத்தை போட்டு காண்பித்தும் சந்திமல் பந்தைச் சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, சந்திமலுக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகளும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. இதனால், சந்திமல், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சந்திமல் மேல்முறையீடு செய்தார்.
ஆனால், சந்திமலின் மேல்முறையீட்டை மைக்கேல் பெலோஃப் நிராகரித்துள்ளார். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் இதை அவர் தெரிவித்தார். இதனால் நாளை தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.
சந்திமலுக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.