7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்டு 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசு ‘கோப்பை’ குமரி முதல் சென்னை வரையிலான அதன் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, ஹாக்கி போட்டிக்கான கோப்பை இன்று கோவைக்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 19ம் தேதி சென்னையில் துவங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நேற்று கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கோப்பையை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் வரவேற்று அறிமுகப்படுத்தினர்.
தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சுகுணா பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுகுணா பள்ளி கொண்டு வரப்பட்ட கோப்பை பின்னர் கே.சி.டி. வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி, தமிழ்நாடு ஹாக்கி சங்க பொது செயலாளர் செந்தில் ராஜ் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil