44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
உலக அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் “செஸ் ஒலிம்பியாட்” மிகப் பிரபலமானது மற்றும் முக்கியமானது. 2 இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டிற்கான போட்டிகள் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அந்நாட்டில் நடைபெற இருந்த சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் ரத்து செய்துள்ளன. இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் மாஸ்கோவில் நடைபெறாது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு (எஃப்ஐடிஇ (FIDE - International Chess Federation)) அறிவித்தது.
ஒரே வாரத்தில் முடிவை அறிவித்த இந்தியா
எனவே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்கிற குழம்பத்திற்கு ஆளானார் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டுவர்கோவிச். ரஷ்யரான டுவர்கோவிச் இந்தப் போட்டியை நடத்த எந்த நாடு விரும்பிகிறோதோ அந்த நாடு விரைவில் முடிவை அறிவிக்குமாறும் குறிப்பிட்டு இருந்தார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்தியா தனது நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக டுவர்கோவிச்க்கு செய்தி அனுப்பப்பட்டது.
அந்த செய்தியில், "எந்தவொரு சதுரங்க (செஸ்) போட்டியையும் ஏற்பாடு செய்ய இந்தியா தயாராக உள்ளது" என்று குறிப்பிட்டு, கான்பூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணித்த அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (ஏஐசிஎஃப் (AICF - All India Chess Federation)) செயலாளர் பாரத் சிங் சவுஹான் செய்தியை அனுப்பி இருந்தார்.
“ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை இருப்பதால் எஃப்ஐடிஇ- தலைவருக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று நினைத்தேன். அவர் ஒரு வார்த்தை மற்றும் கேள்விக்குறியுடன் பதிலளித்தார்: ‘ஒலிம்பியாட்?’ என்று. நான் அவரிடம், ‘நாளை வரை எனக்கு அவகாசம் கொடுங்கள் எனக் கூறினேன்” என்று சவுகான் கூறியுள்ளார்.
மறுநாள், ஏஐசிஎஃப் (AICF) செயலாளர் சவுகான், எஃப்ஐடிஇ (FIDE) தலைவர் ஆர்கடி டுவர்கோவிச்-இடம் கொள்கை அடிப்படையில் போட்டியை எடுத்து நடத்த இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில், முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தும் போட்டியை இந்தியா எடுத்து நடத்துவதை ஆதரித்து எஃப்ஐடிஇ-க்கு கடிதம் எழுதினார்.
ஒரு மில்லியன் டாலர் - 5 நிமிடத்தில் உத்திரவாதம் அளித்த முதல்வர் ஸ்டாலின்
ஆனால், இப்போட்டியை நடத்த சுமார் ஒரு மில்லியன் டாலர் வரை செலவாகும் (தோராயமாக ரூ. 76 கோடி). மேலும், இந்த ஒரு மில்லியன் டாலருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார் உட்பட பல விஷயங்கள் இடம் பெற வேண்டியிருந்தது. இதனால் பல சிந்தனை ஓட்டத்துடன் சவுகான் தென்பட்டார்.
தொடர்ந்து அவர் சிந்தித்து வருகையில், குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலத்தில் போட்டியை நடத்தலாம் என முடிவிற்கு வந்தார். பின்னர் அம்மாநிலங்களில் உள்ள செஸ் விளையாடும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களைக் தொடர்பு கொண்டு, அம்மாநில அரசுகளின் முடிவுகளை கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
சவுகானின் இந்த கோரிக்கையை உடனடியாக ஒரு மாநில முதல்வர் ஏற்றுக்கொண்டார். அவர் தான் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின். அதோடு மட்டுமல்லமால், ஒரு மில்லியன் டாலருக்கான உத்தரவாதத்தை அடுத்த ஐந்து நிமிடத்தில் கொடுத்தார். மேலும், தலைநகரான சென்னையில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மகாபலிபுரத்தில் போட்டிகளை நடத்தவும், கடற்கரை முகம் பார்த்த வண்ணம் இருக்கும் தங்கும் அறைகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என்பதையும் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டரில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது தமிழகத்துக்கு பெருமையான நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து வரும் ராஜாக்களையும், ராணிகளையும் சென்னை நகரம் அன்போடு வரவேற்கிறது” என்று அந்த பதிவில் தெரிவித்தார்.
#ChessOlympiad2022 pic.twitter.com/U2bjZR0U1v
— M.K.Stalin (@mkstalin) March 16, 2022
Delighted that the Chess Capital of India is set to host the 44th Chess Olympiad! A proud moment for Tamil Nadu! Chennai warmly welcomes all the Kings and Queens from around the world!#ChessOlympiad2022
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022
முன்னதாக, சவுகான் கடந்த வெள்ளிக்கிழமை கிராண்ட்மாஸ்டர் மற்றும் பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனை சந்திக்கிறார். நாராயணன் சில அழைப்புகள் செய்து உடனடியாக முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பைப் பெற்றார். “இந்திய அணி கடந்த ஆண்டு முதலமைச்சரிடமிருந்து நேரடியாக (ஆன்லைன் ஒலிம்பியாட்க்குப் பிறகு) விருதுகளைப் பெற்றது. முதல்வர் அலுவலகத்துடன் தொடர்புடைய சிலரை எனக்குத் தெரியும். நான் அவர்களுடன் தொடர்பு கொண்டேன், அது சாத்தியம் என்று அவர்கள் சொன்னார்கள். திங்கள்கிழமை தமிழக முதல்வரைச் சந்தித்தோம். செஸ்ஸுடனான கலாச்சார தொடர்புகளைக் கருத்தில் கொண்டு நேர்மறையான பதிலை பெறுவோம் என்கிற நம்பிக்கையில் நாங்கள் சந்தித்தோம், ”என்று நாராயணன் கூறினார்.
23 ஹோட்டல்கள் சுமார் 2,000 அறைகள்
தமிழகத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் சவுகான்ஆரம்பத்தில் டெல்லியில் போட்டிகளை நடத்தலாம் என்று திட்டத்தில் இருந்துள்ளார். ஆனால், சில காரணிகள் அவரைத் தடுத்துள்ளது. "டெல்லியில் மிகவும் சூடாக இருக்கும். மகாபலிபுரத்தில் உள்ள அறைகள் கடல் நோக்கியவை. டெல்லியில் உள்ள ஹோட்டல்களில் வீரர்கள் தங்கியிருந்தால் அந்த பகுதியில் அவர்கள் விசிட் அதிக இடங்கள் இல்லை. மேலும், டெல்லியில் பெரிய சதுரங்க (செஸ்) கலாச்சாரம் இல்லை” என்று சவுகான் கூறினார்.
தமிழக அரசு போட்டியை எடுத்து நடத்த ஒப்புக்கொண்டவுடன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அறைகள் மற்றும் இடங்களைத் தேடிச் சென்றுள்ளார் சவுகான். “சுமார் ஐந்து முதல் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் எங்களுடன் பயணம் செய்தனர். 4-ஸ்டார் மற்றும் 5-ஸ்டார் என அனைத்தையும் முன்பதிவு செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஒரே நாளில் 23 ஹோட்டல்களில் சுமார் 2,000 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன, அவற்றில் சுமார் 1200 கடல் நோக்கியவை. ஒலிம்பியாட் போட்டிக்கான மண்டபம் (ஹால்) முன்பதிவு செய்யப்பட்டது. மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வேறு யாராலும் ரூ.76 கோடிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, அனைத்து அறைகள் மற்றும் இடங்கள் ஆகியவற்றை முன்பதிவு செய்ய முடியாது. அப்படித்தான் அது பலனளித்தது,” என்றுள்ளார் சவுகான்.
டெல்லி பதில் மகாபலிபுரம் ஏன்?
எனினும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) சவுகானிடம் தொடர் கேள்விகளை எழுப்பி வந்துள்ளது. "டெல்லிக்கு பதிலாக மகாபலிபுரம் ஏன் என்பதை அவர்கள் அறிய விரும்பினர். ஒலிம்பியாட் நடைபெறும் நான்கு புள்ளிகள் ஷெரட்டன் உட்பட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் இருப்பிட வரைபடங்களின் வீடியோக்களை அவர்களுக்கு அனுப்பினோம். FIDE இந்த மாத இறுதிக்குள் தங்கள் ஆய்வுக் குழுவை அனுப்பும். தற்போது மகாபலிபுரத்தில் ஒரு தற்காலிக செயலகம் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் நான்கு மொழிகளில் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள வீரர்களுடன் தொடர்பு இணைப்புகள் திறக்கப்பட்டுள்ளன." என்று சவுகான் கூறினார்.
எஃப்ஐடிஇ-இன் டைரக்டர் ஜெனரல் மற்றும் முன்னாள் கிராண்ட்மாஸ்டர் கருத்து
இந்திய செஸ் சம்மேளனத்தின் இந்த தகுந்த நேர முடிவு, யாருக்கும் பாதமாக அமையாமல் இந்தியாவுக்குச் சாதகமாகச் சென்றது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் கிராண்ட்மாஸ்டர் எமில் சுடோவ்ஸ்கியின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியாவின் முயற்சியை நாங்கள் வெளிப்படையாகவே வரவேற்றோம். போட்டி நடத்தும் உரிமையை பெற இன்னும் சில போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் நாங்கள் தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்தோம். இந்தியா மட்டுமே சரியான நேரத்தில் சரியான முடிவை சமர்ப்பித்தது. இது இந்திய செஸ் சம்மேளனத்தின் ஒரு முக்கியப் பணியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனெனில் இவ்வளவு குறுகிய கால அறிவிப்பில் இவ்வளவு பெரிய நிகழ்வுக்கு தயாராக வருவதற்கு ஒருவர் நன்கு தயாராக இருக்க வேண்டும்.
அந்த வகையில், இந்தியாவின் வளர்ச்சி கவனிக்கத்தக்கது. இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. உலகின் சிறந்த 18 வயதுக்குட்பட்ட வீரர்களில் கிட்டத்தட்ட 50% பேர் இந்தியர்களாக இருக்கின்றனர். இது இந்தியா அடுத்த பல ஆண்டுகளுக்கு செஸ் வல்லரசாக இருக்க உதவும். இங்கு லட்சக்கணக்கானோர் செஸ் விளையாட்டை பின்தொடர்கின்றனர். நிச்சயமாக, இது அனைத்தும் (விஸ்வநாதன்) ஆனந்துடன் தொடங்கியது. ஆனால் இப்போது அது ஒரு வகையான தேசிய பாரம்பரியமாக மாறுகிறது. சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட், இந்திய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக செஸ்ஸை மேலும் உயர்த்தும் என்று நாங்கள் கருதுகிறோம். ” என்று சுடோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்திய துணைகேப்டனின் கருத்து
ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணிகளின் துணைக் கேப்டனான நாராயணனும் இதேபோன்ற உணர்வைப் பகிர்ந்துள்ளார். “இத்தகைய நிகழ்வை நடத்துவதற்கு நாங்கள் நெருங்கிவிட்டோம் என்று நான் நினைக்கவில்லை. நாம் முன்பு ஒரு உலக சாம்பியன்ஷிப் போட்டியை (ஆனந்த் vs மேக்னஸ் கார்ல்சன், 2013) நடத்தினோம். அது ஒரு பெரிய நிகழ்வாக இருந்தது. ஆனால் அதில் இரண்டு வீரர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
தற்போது இந்த அளவிலான ஒரு பெரிய நிகழ்வு, ஒரு செஸ் நாடாக இந்தியாவிற்கு மதிப்பை சேர்க்கிறது. மேலும் இது இந்தியாவில் செஸ் மீதான ஆர்வத்தின் அடிப்படையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். செஸ் போட்டியை தவிர, பல நாடுகள் பங்கேற்கும் ஒரு விளையாட்டு நிகழ்வை நாம் இதுவரை நடத்தியதில்லை (சுமார் 190 நாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன)."என்று தெரிவித்துள்ளார்.
இந்திய செஸ் சம்மேளனத்திற்கு நேற்றைய நாள் ஒரு மனமகிழ்வு நிறைந்த மற்றும் உற்சாகமான நாளாக மாறிப்போயிருந்தது. அதன் தலைவர் சஞ்சய் கபூர் சென்னையில் பாலாஜி கோவிலில் தரிசனம் செய்ய சென்றார். சவுகான் "வாழ்க்கையில் எதைப் பற்றியும் என்னால் குறை கூற முடியாது." என்று கூறியபடி ஒரு கனவில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
200 நாடுகள் - 2000 வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னையில் நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.