Chennai Open WTA 250 Tamil News: சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 (WTA 250) டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது. 250 புள்ளிகள் கொண்ட இந்த டென்னிஸ் தொடருக்கு தமிழக அரசு ஆதரவுடன் தமிழக டென்னிஸ் சங்கம் நடத்துகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 வீராங்கனைகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னை ஓபனில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கரோலின் கார்சியா, 29-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க் 32-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
5 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை ஓபன் தொடர் தொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறுகையில், “சென்னை ஓபன் போட்டிக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். இது தவிர நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் ரூ.3 கோடியில் மின்விளக்குகள் பொறுத்தப்பட உள்ளது. ரூ.1.5 கோடியில் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ரூ.1 கோடியில் 6 டென்னிஸ் கோர்ட்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
தமிழக டென்னிஸ் சங்கத்தின் தலைவர் பேட்டி
இந்தத் தொடர் குறித்து தமிழக டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு:
காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் சானியா கலந்து கொள்ள வில்லை. சென்னை ஓபனில் கலந்து கொள் வதற்கு அவர், முழு உடற்தகுதியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சென்னை ஓபனில் சானியா விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் அவரை அழைத்து, நம்ப முடியாத அளவிலான அவரது டென்னிஸ் வாழ்க்கை பயணத்துக்கு பாராட்டு விழா நடத்துவோம்.
250 புள்ளிகள் கொண்ட ஆடவருக்கான ஏடிபிதொடரை மீண்டும் சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசு ஆர்வம் கொண்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் அட்டவணை நெருக்கமாக உள்ளது. எனினும் அதை நோக்கி செயல்படுகிறோம்.
இந்தஆண்டு போட்டி எப்படி நடக்கிறது என்பதைப்பார்க்க வேண்டும். ஒரு வருடத்திற்கு உரிமம் பெற்றுள்ளோம். 2024-ம்ஆண்டு துபாய் மற்றும் தோஹா போட்டிகளுக்கு இடையே சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்தும் பெரிய வாய்ப்பு உள்ளது.
32 வீராங்கனைகளைக் கொண்ட ஒற்றையர் பிரிவு முதன்மைச் சுற்றுக்கான வைல்டு கார்டுகள் கனடாவின் யூஜின் பவுச்சார்ட், இந்தியாவின்அங்கிதா ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரு வைல்டுகார்டுகள் டென்னிஸ் தர வரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள வீராங்கனைகள் இங்கு வந்து விளையாட விரும்பினால் வழங்கப்படும்.
முன்னாள் 5-ம் நிலை வீராங்கனையான யூஜின் பவுச்சார்ட் 2014-ம்ஆண்டு விம்பிள்டன் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஷர்மதா பாலு,ரியா பாட்டியா ஆகியோருக்கு வைல்டுகார்டு வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
டிக்கெட் விலை
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை பொறுத்தவரை, 7 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகளுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான நாட்களுக்கு தினசரி டிக்கெட் கட்டணமாக ரூ.100, ரூ.200, ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று நாட்களுக்கான டிக்கெட் கட்டணமாக ரூ.200, ரூ.400, ரூ.600என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை எவ்வளவு?
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யூடிஏ மகளிர் டென்னிஸ் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 2 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு சுமார் ரூ.26.50 லட்சமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு சுமார் ரூ.15.77 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது.
இதேபோல், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு சுமார் ரூ.9.58 லட்சமும், 2-ம் இடம் பிடிக்கும் ஜோடிக்கு சுமார் ரூ.5.35 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil