சென்னை சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் காலி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த இடத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சி.எம்.டி.ஏ. ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் இறுதிக்குள் கலந்தாலோசகர் இறுதி செய்யப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“