ஐபிஎல் 2019 சீசனின் ஏலம் நிறைவுற்றது. கலந்து கொண்ட 351 வீரர்களில் 60 வீரர்களை மட்டுமே அணிகள் தேர்ந்தெடுத்து உள்ளன. இதில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை 40. மீதம் 20 வீரர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். சர்வதேச போட்டிகளில் இன்றும் கோலோச்சும் பல சர்வதேச வீரர்களை எந்த அணியும் எடுக்காமல் போனது சர்பிரைஸ் என்றாலும், ஓரளவிற்கு எதிர்பார்த்த ஒன்றே. அதேசமயம், எதிர்பாராத திருப்பங்களாக, எதிர்பார்க்கப்படாத சில வீரர்களும் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். குறிப்பாக, முதல் சுற்றில் ஏலம் போகாத சில வீரர்கள், அடுத்தச் சுற்றில் அதிக விலைக்கு ஏலம் போனார்கள். பல அணிகள் இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு வீரர்களை எடுத்துக் கொண்டிருக்க, 'அண்ணாமலை' ரஜினி - ஜனகராஜ் கூட்டணி போல ஏலத்தில் அமைதியாக இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். 'மஞ்ச சட்டை எங்கப்பா?' என்று தேடும் அளவிற்கே இருந்தது. இதற்கு காரணம், கடந்த சீசனில் அணியில் இருந்த மூன்று வீரர்கள் மட்டுமே, சென்னை அணி வெளியேற்றியது. இதனால், அதிகம் புதிய வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு இல்லை.
எந்த வீரரை குறிவைத்து வந்தார்களோ, அவரை ஏலத்தில் எடுத்துவிட்டு, இருக்கட்டுமே என்பது போல மற்றொரு இளம் வீரரை எடுத்து, சைலன்ட்டாகி விட்டது சிஎஸ்கே.
சென்னை அணிக்காக 2013-15 வரை ஆடிய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மாவை ஐந்து கோடிக்கு எடுத்த நிர்வாகம், ருதுராஜ் கெய்க்வாட் எனும் 21 வயது இளம் பேட்ஸ்மேனை 20 லட்சத்துக்கு எடுத்துள்ளது.
இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றாலும், தோனியின் பேட்டிங் படைக்கு நிச்சயம் பயனுள்ள வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்து மோஹித் ஷர்மா கூறுகையில், "நான் மீண்டும் எனது வீட்டிற்கு திரும்பியது போல் உணருகிறேன். எனது உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. எனது வாழ்வில் அனைத்தும் சென்னையில் இருந்தே எனக்கு கிடைத்தது" என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுமையான பட்டியல்:
எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், கர்ன் ஷர்மா, துருவ் ஷோரே, டு பிளசிஸ், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, சாம் பில்லிங்ஸ், மிட்சல் சான்ட்னர், டேவிட் வில்லே, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், லுங்கி ங்கிடி, இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், என் ஜெகதீசன், ஷர்துள் தாகூர், மோனு குமார், சைதன்யா பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட், மோஹித் ஷர்மா.