IPL 2024 | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த தோல்வி சென்னை பிளே ஆஃப்க்கு செல்வதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சி.எஸ்.கே பிளே - ஆஃப் வாய்ப்புகள்
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுற்ற போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா?, அந்த அணி பிளேஆஃப்க்குள் நுழைய என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
நடப்பு சீசனில் சென்னை இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இருந்தால், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நெட் ரன்ரேட்டில் முந்தி 14 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியிருக்கலாம்.
ஆனால், குஜராத்துக்கு எதிராக சென்னையின் தோல்வி அவர்களுக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும், சென்னை அணி பிளேஆஃப்க்குள் நுழைய அவர்கள் மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். கடைசி இரண்டு மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் சென்னை அணி 16 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். ஆனாலும், பிளே-ஆஃப்க்குச் செல்வதற்கு அவர்களுக்கு 16 புள்ளிகள் மட்டும் போதுமானதாக இருக்காது. ஏனென்றால், பிளே-ஆஃப் ரேஸில் சென்னை அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன. அந்த அணிகள் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன.
டெல்லி - லக்னோ அணிகள் வருகிற 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதும் நிலையில், அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 16 புள்ளிகளைப் பெறலாம். அதனால், நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, சென்னை அணி அதன் 2 போட்டிகளில் நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை சென்னை அணி மீதமுள்ள 2 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால், அவர்கள் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும் என நம்ப வேண்டும்.
இதற்கிடையில், 12 ஆட்டங்களில் ஆடி 10 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் ரேஸில் இருக்கிறது. அவர்கள் மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைப் பெறலாம்.
சென்னை அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை என்றால், மூட்டையைக் கட்டிக் கொண்டு நடையைக் கட்ட வேண்டிய சூழல் வரும். லக்னோ மற்றும் டெல்லி அணிகளில் 14 புள்ளிகளைப் பெறும் ஒரு அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெறும். சென்னை அணி பிளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.