விசில் போடு : 9-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சி.எஸ்.கே. சாதனை

இரு முறை கோப்பையை வென்றதுடன், 4 முறை 2-வது இடம், 9 முறை அடுத்த சுற்று வாய்ப்பு என ஐபிஎல் தொடரில் பலம் மிக்க அணியாக...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது. வேறு எந்த அணியும் இந்த மைல்கல்லை எட்டவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஐ.பி.எல். சீஸனான 2008-ம் ஆண்டு முதல் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது. 2015-ம் ஆண்டு சென்னை அணி உரிமையாளர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த 2 சீஸன்களை தவிர்த்துப் பார்த்தால், தற்போது நடைபெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 9-வது ஐபிஎல் சீஸன் ஆகும். இதில் விசேஷம், பங்கேற்ற ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியில் 2-வது சுற்றான ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறிய அணி சி.எஸ்.கே. மட்டும்தான். தவிர, ஒட்டு மொத்தமாகவே 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே ஐபிஎல் அணி ‘விசில் போடு’ சி.எஸ்.கே.தான்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ஐதராபாத் சன் ரைசர்ஸுக்கும் இடையே நேற்று புனேயில் நடைபெற்ற போட்டியில் அம்பத்தி ராயுடு சதம் உதவியுடன் தனது 8-வது வெற்றியை பெற்றது சி.எஸ்.கே.! இதன் மூலமாக இந்தத் தொடரில் அடுத்த போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திராமல் பிளே ஆஃப் சுற்றுக்கு தனது இடத்தை உறுதி செய்துவிட்டது சி.எஸ்.கே.!

ஐபிஎல் போட்டிகளில் சி.எஸ்.கே. அணியின் செயல்பாடு இது..
2008 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வி)

2009 : அரை இறுதி வரை முன்னேற்றம் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோல்வி)

2010 : சாம்பியன் (இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தியது)

2011 : சாம்பியன் (இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது)

2012 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வி.)

2013 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி)

2014 : அரை இறுதிக்கு முன்னேற்றம் (கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி)

2015 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி)

2016, 2017 : விளையாடவில்லை.

இரு முறை கோப்பையை வென்றதுடன், 4 முறை 2-வது இடம், 9 முறை அடுத்த சுற்று வாய்ப்பு என ஐபிஎல் தொடரில் பலம் மிக்க அணியாக தன்னை நிரூபித்திருக்கிறது, சி.எஸ்.கே.!

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close