Cricket news in tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் நடத்தைப்பெற்று வந்த 2வது போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்துள்ளது.
2வது போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 எடுத்திருந்தது. அதோடு இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் கொண்ட இமாலய இலக்கையும் நிர்ணயித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 164 ரன்களை மட்டும் சேர்த்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் சுமார் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு, ஒரு ஒரு நாள் போட்டிகளில் கூட விளையாடாத இந்திய சுழற்பந்து வீசாளார் அஸ்வின், இன்று தவிர்க்க முடியாத முக்கிய வீரர்களுள் ஒருவராக உள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிகளில் அசத்திய அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரிலும் ஏறுமுகம் காட்டுகிறார். அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அவர் ஆடிய விதம் உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் கருப்பு / களிமண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளம் பற்றி பலர் பல விமர்சனங்களை அள்ளித் தெளித்திருந்தாலும், அந்த ஆடுகளத்தில் சிறப்பாக ஆடி இருந்த அஸ்வின், எப்படி விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். அதோடு அஸ்வின் தனது பந்து வீச்சிலும், பேட்டிங் ஸ்டைலிலும் உள்ளூர் நாயகன் என்பதையும் நிரூபித்து உள்ளார்.
ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளையும், ஒரு சதத்தையும் பதிவு செய்து இயான் போத்தம், கேரி சோபர்ஸ் போன்ற ஆல்– ரவுண்டர் ஜாம்பவங்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொடுள்ளார் அஸ்வின். 3-வது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ஆல்–ரவுண்டர் அஸ்வின், உள்ளூரில் முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதே சாதனையை, கேரி சோபர்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஆகியோர் 2 முறையும், இயான் போத்தம் 5 முறையும் நிகழ்த்தியுள்ளனர்.
அஸ்வின் 2வது இன்னிங்சில் களமிறங்கிய போது இந்திய அணி 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. விக்கெட்டுகள் சரிவை தடுத்து நிறுத்த அணியின் கேப்டன் கோலி போராடிக்கொண்டிருந்தார். ஆனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை கழட்டிய சந்தோஷத்தில் இருந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி, மற்றும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு தொல்லை கொடுக்க துவங்கி இருந்தனர். அதிலும் உள்ளூர் நாயகன் அஸ்வின் மொயீன் அலியின் பந்தில் பவுண்டரிகளை பறக்க விட்டார். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து, பந்தை பவுண்டரி கோட்டிற்கு துரத்தினார். டென்னிஸ் பந்துகளை அடித்து பறக்க விடுவது போல இங்கிலாந்து அணியின் ஒல்லி ஸ்டோன் வீசிய பந்தை பறக்க விட்டு 64 பந்துகளிலே அரை சதம் கடந்து இருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குழுமியிருந்த 10,000 பார்வையாளர்களும் அஸ்வின்… அஸ்வின்… என்று முழக்கமிட 134 பந்துகளில் தனது 5 வது சதத்தை உள்ளூர் மைதானத்தில் பூர்த்தி செய்தார். மறுமுனையில் அவரோடு ஜோடி சேர்ந்திருந்த சிராஜ் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
“நான் எப்படி குணமடைந்து இரவு முழுவதும் தூங்கப் போகிறேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இறுதியாக நான் ஸ்வீப் ஷாட் அடித்தது, எனக்கு 19 வயது இருந்தபோது தான். அப்போது தான் நான் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு தான் நான் ஸ்வீப் ஷாட் பயிற்சி செய்யத் தொடங்கினேன்” ”என்று அஸ்வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் தெரிவித்து இருந்தார்.
மேலும் “விக்ரம் ரத்தோர் புதிய விருப்பங்களை ஆராய உதவியாக இருந்தார். கடந்த சில மாதங்களில் நான் பேட்டிங் செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தார். எனது அடுத்த டெஸ்டை எப்போது விளையாடுவேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று தனது பேட்டிங் பாணி பற்றியும் கூறி இருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி போட்டியில் அஸ்வின் சிறப்பாக ஆடி இருந்தார். அதோடு அந்த அணியினர் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடித்து சுமார் 190 நிமிடங்கள் களத்தில் நின்றார். பந்து வீச்சிலும் அந்த அணியை மிரட்டி எடுத்தார். அடிலெய்டு மற்றும் மெல்போனில் நடந்த போட்டிகளில் அந்த அணியின் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் 392 விக்கெட்டுகளையும் 2,600 ரன்களையும் எடுத்து அசத்தியுள்ளர் அஸ்வின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil“