Advertisment

தமிழக இளம் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி மரணம்: டி.என்.பி.எல் வாய்ப்பு தவறியதால் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்த சோகம்

சாமுவேல் ராஜ் 2023, 2024 ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் தேர்வு ஆக்குவதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த இரண்டு ஆண்டுகளும் தேர்வு செய்யப்படவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai youth jumps off Kathipara flyover dies not selected for TNPL Tamil News

எம்.பி.ஏ பட்டதாரியான சாமுவேல் ராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புச்சி பாபு தொடரில் கடந்த ஆண்டு விளையாடியுள்ளார்.

சென்னை, கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை 10.15 மணியளவில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

Advertisment

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்த வாலிபர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் கிரிக்கெட் வீரர் எனவும், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாமுவேல் ராஜ் 2023, 2024 ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் தேர்வு ஆக்குவதற்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார்.  இந்த இரண்டு ஆண்டுகளும் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் சில மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்துள்ளார். 

இந்த சூழலில், இன்று வழக்கம் போல் ராமாபுரத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து விட்டு வீடு திருப்பும் போது, மன உளைச்சலில் சாமுவேல் ராஜ் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து உயிரைமாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

எம்.பி.ஏ பட்டதாரியான சாமுவேல் ராஜ் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புச்சி பாபு தொடரில் கடந்த ஆண்டு விளையாடியுள்ளார். பி.சி.சி.ஐ ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான தொடரில் தெற்கு மண்டல அணியை சாமுவேல் ராஜ் வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவர் திறமை வாய்ந்த ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்றும் அவரது நண்பர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அவரது மரணம் கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tnpl Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment