scorecardresearch

புஜாராவுடன் ஒரு நேர்காணல் : ‘பிங்க் பந்து ஆட்டத்தில் பந்தை பார்ப்பதிலேயே சிக்கல்’ – புஜாரா ஓபன் டாக்

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இளஞ்சிவப்பு பந்து மூலம் வெளிநாடுகளில் நிறைய சாதகம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடினால் – என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. பி.சி.சி.ஐ என்ன தீர்மானிக்கிறது என்பதைப் பார்ப்போம்…

Cheteshwar Pujara interview pink ball test visibility problem - புஜாராவுடன் ஒரு நேர்காணல் : பிங்க் பந்தில் ஆட்டத்தில் பந்தை பார்ப்பதில் சிக்கல் - புஜாரா ஓபன் டாக்
Cheteshwar Pujara interview pink ball test visibility problem – புஜாராவுடன் ஒரு நேர்காணல் : பிங்க் பந்தில் ஆட்டத்தில் பந்தை பார்ப்பதில் சிக்கல் – புஜாரா ஓபன் டாக்

Sriram Veera

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகளை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சனை உட்பட பல சுவாரஸ்ய தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸுடன் சத்தீஸ்வர் புஜாரா பகிர்ந்து கொள்கிறார்.

இளஞ்சிவப்பு(Pink Ball) பந்தை சரியாக பார்ப்பது சிக்கலாக இருந்ததா? குறிப்பாக விளக்குகளின் கீழ் இரண்டாவது செஷனில் விளக்கு வெளிச்சத்தின் கீழ் எப்படி இருந்தது?

ஆம். நீங்கள் அந்த பந்தை சரியாக கணிக்க கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். களத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டும். சிவப்பு பந்து என்று வரும்போது, பகல் நேரத்தில் தெரிவுநிலை என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் விளக்கு வெளிச்சத்தின் கீழ் இளஞ்சிவப்பு பந்தை எதிர்கொள்ள, இரண்டாவது அல்லது மூன்றாவது செஷனில் போது ஓய்வறையில் இருந்துவிட்டு, பேட் செய்ய விளக்குகளின் கீழ் நீங்கள் நடக்கும் போது, பார்வை என்பது சற்று சிக்கலாக இருக்கும். பந்து அப்போது அதிகம் ஸ்விங் ஆகும். எனவே நீங்கள் கிரீசில் சிறிது நேரம் செலவிட வேண்டும். அந்த ஒளியுடன் பழக முயற்சி செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் உங்கள் ஷாட்களை விளையாட ஆரம்பிக்கலாம்.

விளக்குகளின் கீழ், இளஞ்சிவப்பு பந்தை வீசும் போது பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து சற்று தாமதமாக வருவதாக நீங்கள் பார்க்கிறீர்களா? சரியாக அப்போது என்ன நடக்கிறது?

அது தாமதம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அது நிச்சயமாக சற்று வித்தியாசமானது. அந்த சூழ்நிலையில் நான் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியதால், நான் அதை அப்படியே உணர்ந்தேன். நான் அதிகமாக விளையாடியிருந்தால், நான் சரியாக அந்த சூழலை விளக்க முடியும். ஆனால் அது வித்தியாசமானது. பனி உள்ளே வரத் தொடங்குவதற்கு முன்பு நான் 30-45 நிமிடங்கள் விளக்கு வெளிச்சத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தேன். பந்து அவ்வளவு நகரவில்லை; இது கொஞ்சம் எளிதாகிவிட்டது. மேலும், கொல்கத்தாவில் சற்று முன்னதாகவே இருட்டாகிறது. இந்த நேரத்தில் வானிலை வேறுபட்டது – சற்று மங்கலான வளிமண்டலம் இருந்தது, அதில் இது சில பார்வை சிக்கல்களையும் சேர்க்கலாம். இவை அனைத்தும் யூகங்களே – இது பிங்க் பந்து கிரிக்கெட் டெஸ்ட்டின் ஆரம்ப நாட்களே. எனவே இது குறித்து எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. வெவ்வேறு இடங்களில் விளையாடும் போது எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

அதன் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இளஞ்சிவப்பு பந்து பிரதானமாக மாறுமா?

ஒரு வருடத்தில் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பது நலம். அதிக ரசிக கூட்டம் வரும் சூழ்நிலையை உருவாக்க நீங்கள் விரும்பினால் அப்படி செய்யலாம். ஆனால் ஒரு வழக்கமான அடிப்படையில் இதை நான் சொல்ல மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட் நிச்சயமாக சிவப்பு பந்துடன் விளையாடப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எப்போதாவது, நீங்கள் இளஞ்சிவப்பு பந்துடன் விளையாடலாம். ஆனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் சிவப்பு பந்துடன் விளையாடப்படும்.

பகல் இரவு டெஸ்ட்டில் பனி ஒரு முக்கிய காரணி, இதனால் ஸ்விங், ஸ்பிங் பாதிக்கக்கூடும் என்ற கவலையும் உள்ளது. இந்தியாவில் நம்முடைய சொந்த பலங்களை மறுப்பது புத்திசாலித்தனமா?

இதைப் பற்றி நான் சொல்ல முடியாது. பி.சி.சி.ஐ தான் முடிவெடுக்க வேண்டும். நான் சொல்வது என்னவென்றால், நாம் இளஞ்சிவப்பு பந்து போட்டியை ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடினால் நன்றாக இருக்கும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இது இருப்பது சூழல் தெரியவில்லை. நாம் இளஞ்சிவப்பு பந்துகளில் மூன்று போட்டிகளில் விளையாடுகிறோம். எனக்குத் தெரிந்தவரை இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு வருடத்தில் ஒரு பிங்க் பந்து ஆட்டம் என்றால் நன்றாக இருக்கும்.

இளஞ்சிவப்பு பந்து கடினமானது என்று ஒரு பேச்சு இருந்தது. அதன் கடினத்தன்மையை நீங்கள் என்ன எடுத்துக்கொள்கிறீர்கள்?

நீங்கள் விளையாடும் எந்த இளஞ்சிவப்பு பந்தாக இருந்தாலும், அது கொல்கத்தா டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்ட எஸ்ஜி தயாரிப்பு பந்தாகவோ, அல்லது கூக்கபுரா தயாரிப்பு பந்தாகவோ தான் இருக்கும்.  ஆனால், இளஞ்சிவப்பு பந்து நிச்சயமாக சிவப்பு பந்தை விட கடினமானது என்பது உண்மை தான். இது சிவப்பு அல்லது வெள்ளை பந்தை விட சற்று வேகமாக பயணிக்கும். அரக்கு கூடுதலாக பூசப்படுவதால், கடினத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால், வேகமாக செல்வதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், இது ஒரு வகையான நகர்வுகள் / அசைவுகள், வெள்ளை பந்தை விட அதிகமாக ஸ்விங் ஆகும். ஸ்லிப்பில் நிற்பவர்களுக்கு இது சவாலாக இருக்கும். சிவப்பு நிற பந்தை விட இது விரைவாக பயணிக்கிறது என்பது உண்மை தான்.

விளக்கு வெளிச்சத்தின் கீழ் விளையாடியது தான் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களால் தாக்கப்பட்டதற்கு காரணமா?

அவர்களுக்கு இளஞ்சிவப்பு பந்துடன் விளையாடிய எந்த முதல் தர அனுபவமும் இல்லை. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக வேகமாக வீசக் கூடியவர்கள். கூடுதலாக, நான் சொன்னது போல் இளஞ்சிவப்பு பந்தின் தன்மை மிக விரைவாக இருக்கும். இதெல்லாம் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கும்.

இப்போது, ஆஸ்திரேலியா மற்றும் பிற வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு எதிரான சூழல்களில் இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் விளையாட அழுத்தம் கொடுக்கின்றன. இளஞ்சிவப்பு பந்து அங்கு செல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இளஞ்சிவப்பு பந்து மூலம் வெளிநாடுகளில் நிறைய சாதகம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடினால் – என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. பி.சி.சி.ஐ என்ன தீர்மானிக்கிறது என்பதைப் பார்ப்போம்… ஆட்டத்தின் போது, பந்து பழையதாகிவிட்டால், கூடுதலாக சில ரன்களை எடுக்க முடிகிறது, இளஞ்சிவப்பு பந்து போட்டிகள் இதுவரை அதிக ஸ்கோர்களை குவிக்கவில்லை.

ஒரு அணியாக இந்தியா அதிக பிங்க் பந்து டெஸ்ட் விளையாட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பால், ஒரு பேட்ஸ்மேனாக சவால் எப்படி இருந்தது? நீங்கள் அதை அனுபவித்தீர்களா?

நான் சவாலை அனுபவித்தேன், ஆம். இது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். ஒருவருக்கு வித்தியாசமான நுட்பம் தேவை, ஆனால் வேறு அணுகுமுறை தேவை என்று நான் கூறமாட்டேன். முதல் செஷனில் நீங்கள் பேட்டிங் செய்யும்போது, பந்து நன்றாக வரும். அதனால் உங்கள் ஷாட்களை நீங்கள் விளையாடலாம். புதிய பந்து என்றாலும், காலை பொழுதில் ஒரு புதிய சிவப்பு பந்து ஸ்விங் ஆவது போல் அது ஆவதில்லை. இது பிற்பகலில் மட்டுமே தொடங்குகிறது, அந்த நேரம் எளிதாக அமைகிறது. சிவப்பு பந்தில் விளையாடுகையில், முதல் செஷன் மிகவும் முக்கியமானது. இளஞ்சிவப்பு பந்து என்றால் அது வேறு விதம். இரண்டாவது செஷன் விளக்குகள் எரிவதால் இரண்டாவது செஷன் மிகவும் முக்கியமாகிறது. முதல் செஷனில் நீங்கள் பந்துகளை தவிர்ப்பதை விட, இரண்டாவது செஷனில் இன்னும் சில பந்துகளை தவிர்க்க வேண்டியிருக்கும்.

இளஞ்சிவப்பு பந்தில் விளையாடி உங்களிடம் அதிக பயிற்சி இல்லை. நீங்கள் அதை எவ்வாறு நிர்வகித்தீர்கள்?

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விளக்குகளின் கீழ் முடிந்தவரை பல வலைப் பயிற்சி செஷன்கள் இருந்தன. நாங்கள் அதில் பலவற்றை முயற்சித்தோம். முதல் டெஸ்டுக்கு முன் என்.சி.ஏவில் இரண்டு செஷன்கள், பின்னர் கொல்கத்தாவில் ஒரு நெட் செஷன் இருந்தது. ​​நாங்கள் இனி இளஞ்சிவப்பு-பந்து டெஸ்ட்களை விளையாடப் போகிறோம் என்றால், முடிந்தவரை அதிக நெட் செஷன்கள் இருக்க வேண்டும்.

இந்த தொடரில் நீங்கள் விளையாடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் உங்களுக்கு அரைசதம் கிடைத்தன, ஆனால் அந்த இன்னிங்ஸ்களை நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு தொடரவில்லை. எவ்வளவு ஏமாற்றமடைந்தீர்கள்?

இந்த டெஸ்ட் போட்டி (கொல்கத்தா) நான் ஏமாற்றமடையவில்லை. நான் எனது பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். ஆனால் அந்த பந்து இன்னும் கொஞ்சம் பவுன்ஸ் மற்றும் வேகத்தைக் கொண்டிருந்தது. நான் மிகவும் வித்தியாசமாக எதையும் அப்போது செய்திருக்க முடியாது; நான் நன்றாக செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்தேன். சற்று வித்தியாசமாக நடந்து கொள்ளும் ஒரு பந்தை எப்போதாவது நீங்கள் பெறுவீர்கள். பந்து வீச்சாளர் அதிக வேகத்தில் பந்து வீச முயற்சித்தது போல் தெரியவில்லை. ஆடுகளம் அந்த பந்தை விரைவாகவும் கூடுதல் பவுன்ஸ் ஆகவும் மாற்றியது என்று நினைத்தேன்.

இந்தூர் ஷாட் குறித்து நான் சற்று ஏமாற்றமடைந்தேன்; நான் டிரைவ் செய்ய முடியும் என்று நினைத்தேன், ஆனால் அந்த ஷாட் அதற்கு போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்தமாக, நான் பேட்டிங் செய்யும் விதத்தில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பந்தை டைமிங் செய்த விதம், ஷாட்களில் சரளமாக, இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் எனது கால் நகர்த்தல் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

நீங்கள் சில நேரங்களில் மிகவும் கோபப்படுகிறீர்களா?  இந்தூர் டெஸ்ட்டில் உங்கள் ஷாட் மிகவும் காற்று நிரப்பப்பட்ட ஷாட்டாக இருந்ததே?

(சிரிக்கிறார்). இல்லை, நான் அதை செய்ய மாட்டேன். இது நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று. பாருங்கள், ஒரு டெஸ்ட்டில் 50 ரன்கள் மட்டும் எடுப்பது என்பது தோல்வி அல்ல! சில நேரங்களில் டெஸ்ட் போட்டியில் புஜாரா 50 ரன்கள் மட்டும் எடுப்பது என்பது தோல்வி என்றே மக்கள் நினைக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது நல்லது. ஆனால் பேட்ஸ்மேனாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 50 எளிதானது அல்ல! இப்போதிலிருந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் நான் 50 ரன்கள் எடுத்தாலும், நான் அதை ஏற்றுக் கொள்வேன். நீங்கள் நூறு ரன்கள் அடித்தாலும் கூட, பேட்டிங்கில் மேலும் முன்னேற்றம் அடைவது எப்போதும் முக்கியமாகும்.

இந்தூரில், போ என்ற வார்த்தையிலிருந்து (அதிரடியாக) உங்கள் ஷாட்களை விளையாடத் தொடங்கினீர்கள். அங்கு என்ன நடந்தது? உங்கள் ஷாட்களை நீங்கள் விளையாடப் போகிறீர்கள் என்று நினைத்து வெளியே வந்தீர்களா?

அது எதேச்சையாக நடந்தது. நான் அப்படி ஒரு மனநிலையுடன் வெளியே வரவில்லை. நான் சரளமாக நகர்கிறேன் என்பதைக் கண்டேன், நேரம் நன்றாக இருந்தது, நான் அப்படி (வேகமாக) விளையாட ஆரம்பித்தேன். தளர்வான பந்துகளை பவுண்டரிகளாக மாற்ற முயற்சித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே தீர்மானி முடியாது; அது இயற்கையாகவே நடக்கிறது. டிக்ளேர் செய்யவோ அல்லது வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் (அதிரடியாக ஆட நினைக்கிறீர்கள்) எனில் அப்படி முன்கூட்டியே தீர்மானித்து விளையாடலாம். ஆனால், அந்த சூழல்களை தவிர்த்து நீங்கள் முன்கூட்டியே எதையும் தீர்மானிக்க முடியாது. முதல் இன்னிங்ஸில், நீங்கள் அங்கு சென்று நிலைமைகளை மதிப்பிட்டு எதிர்வினையாற்றுகிறீர்கள். அவ்வளவு தான்.

வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்வி. இந்த இந்திய வேகப்பந்து கூட்டணி பந்து வீசும் போது, ஸ்லிப்பில் நிற்பதை எப்படி உணருகிறீர்கள்?

இதில் சிறந்த விஷயம் என்னவெனில், ஸ்லிப்பில் நிற்கும் போது நீங்கள் ஒருபோதும் தூங்க முடியாது.

சில நேரங்களில், நீங்கள் ஓய்வெடுக்க நினைப்பீர்கள். ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது, நீங்கள் எப்போதும் உங்கள் கால்விரல்களில் நிற்பீர்கள். எந்த ஒரு பந்திலும் கேட்ச் வரலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இது ஒரு பெருமையான உணர்வு. நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். அந்த ஒரு பந்து (கேட்ச்) எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியும். இது உண்மையில் ஸ்லிப் ஃபீல்டிங்கை எளிதாக்குகிறது – ஏனென்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதால், பந்து எந்த நேரத்திலும் வரும் என்று எதிர்பார்த்து, அந்த நேரத்தில் நீங்கள் விளையாட்டில் அதிக கவனத்தோடு இருப்பீர்கள். இது ஒரு சிறந்த உணர்வு. இது ஒரு பெருமையான தருணம்.

உங்கள் பந்துவீச்சு கூட்டணியை (வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல) தெரிந்து கொள்ள ஏதாவது சிறப்பாக ஒன்றை உங்களால் செய்ய முடியும். அடிலெய்ட் டெஸ்ட் எனக்கு நினைவிருக்கிறது, நாங்கள் 250 அல்லது ஏதோவொன்றைப் பெற்றோம், பிறகு, அந்த ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னிலை பெற்றோம். அது ஒரு சிறப்பு உணர்வு. ஒழுக்கமான ஆடுகளத்தில் 250 ரன்களுக்கும் குறைவாக ஆல் அவுட் செய்யும் பந்துவீச்சாளர்களைப் பார்ப்பது ஒரு சிறந்த உணர்வு.

அணியில் விளையாடும் பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, வெளியே காத்திருப்பவர்களும் சிறப்பானவர்களே.

உங்கள் ஸ்லிப் அமைப்பு ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்பது போல் இருக்கிறது. முதல் மற்றும் இரண்டாவது அல்லது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்லிப் ஃபீல்டர்களுக்கிடையிலான இடைவெளி – ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற அணிகளை விட குறுகலாகத் தெரிகிறது. காரணம் என்ன, நீங்கள் அதிகமாக டைவ் செய்ய விரும்பவில்லையா?

பந்து புதியதாக இருக்கும்போது, எட்ஜ்கள் மிகச்சிறப்பாக வரும். பழைய பந்துடன் எங்கள் ஸ்லிப் கார்டனைப் பார்த்தால், எங்கள் ஸ்லிப் இடையே நிறைய இடைவெளி இருக்கும். ஸ்லிப்களுக்கு இடையில் சரியான தூரம் இருப்பது முக்கியம்; பீல்டர்களுக்கு இடையில் பந்து செல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். பந்து புதியதாக இருக்கும்போது, அது வேகமாகப் பயணிப்பதால், அது உங்களை கடந்து செல்ல நீங்கள் விரும்பமாட்டீர்கள். பந்து சற்று பழையதாக இருக்கும்போது, உங்களுக்கு அதிக நேரம் கிடைப்பதால், நீங்கள் டைவ் செய்ய முடியும்.

ஆனால் பந்து புதியதாக இருக்கும்போது, நாங்கள் இப்போது கடைபிடிக்கும் ஸ்லிப் முறையே அர்த்தமுள்ளதாக இருக்கும். மேலும், போட்டி இந்தியாவில் நடப்பதால், இரண்டாவது ஸ்லிப் முதல் ஸ்லிப்பை விட மிகவும் நெருக்கமாக நிற்கும். அப்போது குறுகிய அல்லது தாழ்வான உயரத்தில் வரும் பந்தைப் பிடிக்க முடியும். மூன்றாவது ஸ்லிப் இரண்டாவது ஸ்லிப்பை விட இன்னும் முன்னால் இருக்கும். அது லோ கேட்ச்சாக இருந்தால் அப்போது, மற்ற பீல்டர்கள் அதை பிடிக்கச் செல்வார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதுவே, பந்து உயரமாக முதல் ஸ்லிப்பை நோக்கி வந்தால், இரண்டாவது ஸ்லிப்பில் உள்ளவர் அங்கு செல்ல வேண்டியதில்லை என்று தெரிந்து கொள்வார். எந்த குழப்பமும் அங்கு இருக்காது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cheteshwar pujara interview pink ball test visibility problem