உலகின் முன்னணி அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்தின் பிரெடா நகரில் இன்று தொடங்கியது. இதில், துவக்க போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் உலகின் சிறந்த ஆறு அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனா, உலகின் நம்பர்.1 அணி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மோசமான தோல்விக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி இன்று களமிறங்கியது. துவக்க போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து ஆடியது.
முதல் பாதியில் 26-வது நிமிடத்தில் இந்தியாவின் ரமன்தீப் சிங், முதல் கோல் அடித்தார். இதனால், முதலாம் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியில், 54வது நிமிடத்தில் இளம் வீரர் தில்ப்ரீத் சிங் கோல் அடித்தார். 57வது நிமிடத்தில் மந்தீப் சிங் மூன்றாவது கோல் அடிக்க, 60வது நிமிடத்தில் மீண்டும் ரமன்தீப் சிங் இரண்டாவது கோல் அடிக்க, 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஜூன் 24ம் தேதி நடக்கும் போட்டியில் அர்ஜென்டீனாவையும், ஜூன் 27ம் தேதி ஆஸ்திரேலியாவையும், ஜூன் 28ம் தேதி பெல்ஜியத்தையும், ஜூன் 30ம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் இந்தியா விளையாட உள்ளது.