உலகக் கோப்பை முடிந்த பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்னாப்பிரிக்க தொடர் என்று எதிலும் அவர் பங்கேற்கவில்லை. அணியில் நீடிப்பாரா என்பது குறித்தும் எந்தவித தகவலும் அவர் இதுவரை அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
Advertisment
ராணுவ வீரர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மாதம் நேரம் செலவிட்ட தோனி, தற்போது முழுக்க முழுக்க குடும்பத்தினருடன் மட்டுமே உள்ளார்.
சமீபத்தில் மீடியாவை சந்தித்த பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூட, 'தோனி அணிக்கு திரும்புவாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர் அணியில் மீண்டும் இணைவது குறித்து அவர் தான் முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார்.
Advertisment
Advertisement
அதேசமயம், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு, இந்திய அணிக்கு சரியான விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் முனைப்பில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
இந்திய அணியில் முதல் விக்கெட் கீப்பர் ஆப்ஷனாக இப்போதும் இருப்பவர் ரிஷப் பண்ட் மட்டுமே. ஆனால், அவரிடம் கன்சிஸ்டன்சி இல்லாததால், தர்மசங்கடமான சூழலில் தேர்வுக்குழுவினர் உள்ளனர். ஆகையால், மீண்டும் சாஹா ஆப்ஷனுக்கு அவர்கள் செல்ல, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாஹா விளையாடி வருகிறார்.
சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என்று அடுத்தடுத்த விக்கெட் கீப்பர்கள் ஆப்ஷன் இருந்தாலும், அட்லீஸ்ட் 50 சதவிகிதமாவது தோனியின் ஹிட் மற்றும் கன்சிஸ்டன்சியில் ஒரு விக்கெட் கீப்பர் கிடைக்கமாட்டாரா என்று பிசிசிஐ தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த இடியாப்ப சிக்கலில், மீண்டும் தோனி குறித்து ரசிகர்கள் பேசத் தொடங்க, ரவி சாஸ்திரியும் தோனி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து சாஸ்திரியிடம் சில கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு, "தோனி எங்களின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார். தோனி திரும்பி வர விரும்புகிறாரா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, நான் அவரை சந்திக்கவில்லை. முதலில் அவர் விளையாட தொடங்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதைப் பிறகு பார்ப்போம். உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு அவர் மீண்டும் விளையாடத் தொடங்கியதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாட ஆர்வமாக இருந்தால் நிச்சயம் தேர்வாளர்களுக்குத் தெரியப்படுத்துவார். என்றுமே தோனி மிகச் சிறந்த வீரர் தான். எங்களின் மிகப்பெரிய வீரரும் கூட" என்று தெரிவித்துள்ளார்.