கோவையை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில் 15 கிலோ மீட்டர் தொடர்ந்து ஓடிய படி, 11,520 தடவை சிலம்பம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கோவை குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் பிரியா தம்பதியரின் மகன் மித்ரன். ஏழு வயதான இவர், தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் , அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு போன்ற தமிழ் பாரம்பரிய கலைகளை சிறு வயது முதலே ஆர்வமாக கற்று வருகிறார்.
சிறுவனின் ஆர்வத்தை கண்ட அவரது பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் சிலம்பம் சுழற்றுவதில் பிரத்யேக பயிற்சி வழங்கியுள்ளார்.
அதன் படி 15 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடிய படி'ஒற்றை சிலம்பத்தை, ஒரு மணி நேரம் முப்பத்தாறு நிமிடங்களில், 11,520 தடவை சிலம்பம் சுழற்றி உலக மித்ரன் சாதனை படைத்துள்ளார்.
குரும்ப பாளையம் ஆதித்யா குளோபல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சாதனை, இந்தியா உலக சாதனை புத்தகம் - யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் மற்றும் அமெரிக்கன் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
சாதனை மாணவன் மித்ரனுக்கு உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இந்த சாதனை நிகழ்ச்சியில் முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மித்ரனை உற்சாகபடுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“