எஃப்.எம்.எஸ்.சி.ஐ மற்றும் ஜேகே டயர் இணைந்து நடத்திய 25வது தேசிய அளவிலான பார்முலா 4 கார் பந்தையம் கோவை செட்டிபாளையம் பகுதியிலுள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை துவங்கிய இந்த போட்டிகளில் முதல் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.
இதில் எல்.ஜி.பி பார்முலா 4 ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தையங்களும், ஜேகே டயர் மற்றும் ராயல் என்.ஃபீல்.டு காண்டினண்டல் கோப்பை, ஜேகே டயர் எண்டியுரன்ஸ் கோப்பைக்கான மோட்டார் சைக்கிள் பந்தையமும் நடத்தபட்டது. மைதானத்தில் அனல் பறக்கும் விதமாக நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தையம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் 2 மற்றும் 3 வது ரேஸ் பந்தையங்களில் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்து அசத்தினார். ஆர்யா சிங் இரண்டாம் இடத்தையும், திஜில் ராவ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதேபோல் 3வது ரேஸில் சரண் விக்ரம் மார்ஸ் 2வது இடத்தையும், ஆர்யா சிங் 3வது இடத்தையும் பிடித்தனர். இதில் 2 மற்றும் 3 வது ரேசில் முதலிடம் பிடித்த அஸ்வின் தத்தா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தையத்தில் துருவ் கோஸ்வாமி முதலிடத்தையும், கைல் குமரன் 2வது இடத்தையும், அர்ஜூன் சியாம் நாயர் 3வது இடத்தையும் பிடித்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற ஜே.கே. டயர் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் மோட்டார் சைக்கிள் போட்டியில் சுதீர் சுதாகர் முதலிடத்தையும், அனீஷ் ஷெட்டி 2வது இடத்தையும், ஆல்வின் சேவியர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்முலா 1 கார் பந்தைய வீரர் நரேன்கார்த்திகேயன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கினார். நடைபெற்ற இந்த கார் பந்தைய போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.