மாநில அளவில் நடைபெற்ற கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தங்கம் வென்றுள்ளார்.
கோவை மாவட்டம், லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி அஸ்வினி. இச்சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த மாணவி அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொண்டார்.
இதில், கம்பு ஊன்றி உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மாணவி, 2.30 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதையடுத்து, தேசிய அளவில் லக்னோவில் நடைபெறவுள்ள போட்டியில் மாணவி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், மாணவிக்கு பள்ளி சார்பில் பாராட்டி விழா நடத்தப்பட்டது. அப்போது, தனது பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்தார்.
மேலும், போட்டிகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை எடுத்துச் செல்ல சில பேருந்துகள் அனுமதிப்பதில்லை எனவும், இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்வதற்கு தனி அனுமதி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி - பி.ரஹ்மான்