பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
இந்திய மல்யுத்த வீரர்கள் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி திரளாகச் சென்ற அவர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாஜக எம்பி மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மல்யுத்த வீரர்களை கைது செய்த டெல்லி காவல் துறையை கண்டித்தும் பா.ஜ.க எம்.பி-யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பாஜக எம்-பி யை கைது செய்ய வேண்டும் எனவும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil