பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கம்போடியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் தங்க பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி கம்போடியா நாட்டில் உள்ள சியாம் ரீப் நகரில் நடைபெற்றது.
கடந்த 27ம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, அர்ஜெண்டினா, தாய்லாந்து,கம்போடியா, மெக்சிகோ,கனடா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம்,சக்ராசனம்,என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கோவையை சேர்ந்த யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளரும்,பிரபல யோகா உலக சாதனை மாணவி வைஷ்ணவியிடம் பயிற்சி பெற்ற ஆறு மாணவ,மாணவிகள் உட்பட 7 பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கம்போடியா நாட்டில் யோகா போட்டியில் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil