கோவை மாவட்டத்தில், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஒருங்கிணைப்பில், கௌமார மடாலயத்துடன் இணைந்து வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 73 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக, தொடர்ச்சியாக 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி கொண்டே மாணவர்கள் சைக்கிள் ஓட்டினர். மாணவர்களின் இந்த சாதனை காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்கு கூடியிருந்த பெற்றோர் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
மேலும் விழா தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற எஸ். பாண்டியன் ஆசான் கூறுகையில், "இதுவரையில், சிலம்பக் கலைக்கான தேசிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், இத்தகைய உலக சாதனை நிகழ்வுகள் சிலம்பக் கலைக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தர உதவும் என நம்புகிறோம்" என்று கூறினார்.
மேலும், வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவரும், தலைமை பயிற்சியாளருமான திலீப் பேசும் போது, "தற்போது, 73 மாணவர்கள் பங்கேற்று சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றும் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்" எனக் கூறினார்.
இந்நிகழ்வில், கலைமணி குருநாதர் சித்தர் துரைசாமி, பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் திரைத்துறை ஸ்டன்ட் இயக்குநருமான கிராண்ட் மாஸ்டர் பவர். எஸ். பாண்டியன் ஆசான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தி - பி.ரஹ்மான்